கெம்பண்ணா ஆணைய அறிக்கை வெளியானால் முதல்வர் வேட்டி, சட்டை கருப்பாகும்: விஸ்வநாத்
மைசூரு:''கெம்பண்ணா ஆணையத்தின் அறிக்கை வெளியானால், முதல்வர் சித்தராமையாவின் வேட்டி, சட்டை கருப்பாவது உறுதி, என பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் தெரிவித்தார்.கர்நாடகாவில், 2013ல் காங்கிரஸ் அரசு இருந்த போது, அர்க்காவதி லே - அவுட்டில் சட்டவிரோதமாக நில மறு அறிவிப்பு செய்யப்பட்டது. அன்றைய முதல்வர் சித்தராமையா மீது எதிர்க்கட்சியான பா.ஜ., குற்றம்சாட்டியது.அர்க்காவதி லே - அவுட் அமைக்க, பி.டி.ஏ., எனும் பெங்களூரு நகர வளர்ச்சி ஆணையம், நிலம் கையகப்படுத்தியிருந்தது. இதில் 422.25 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதில் இருந்து நீக்க, பி.டி.ஏ., திட்டமிட்டது. ஆனால், முதல்வர் சித்தராமையா கூடுதலாக 119 ஏக்கர் நிலத்தை சேர்த்து, சட்டவிரோதமாக நில மறு அறிவிப்பு செய்ததாக புகார் கூறப்பட்டது. 810 பக்க அறிக்கை
இது தொடர்பாக, விசாரணை நடத்த சித்தராமையா அரசு, 2014ல் நீதிபதி கெம்பண்ணா தலைமையில் கமிஷன் அமைத்தது. புகார்தாரர்கள், இந்த கமிஷனிடம் ஆவணங்களை தாக்கல் செய்யும்படி, அரசு கூறியது. இதன்படி பா.ஜ.,வை சார்ந்த வக்கீல் நடராஜ் சர்மா, துரைராஜு, நில மறு அறிவிப்பு தொடர்பாக, 810 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை சமர்ப்பித்தனர்.கெம்பண்ணா கமிஷன், பல கோணங்களில் விசாரணை நடத்தி அறிக்கை அளித்துள்ளது. இந்த அறிக்கையை அரசு இன்னும் பகிரங்கப்படுத்தவில்லை.இது பற்றி, மைசூரில் நேற்று விஸ்வநாத் அளித்த பேட்டி:'மூடா' முறைகேடு தொடர்பாக, முதல்வர் சித்தராமையா சமீபத்தில் காங்., மேலிடத் தலைவர்களை சந்தித்தார். சித்தராமையா செல்லும் இடங்களில் எல்லாம், தன் அரசியல் வாழ்க்கையில், ஒரு கரும்புள்ளியும் இல்லை என்கிறார். கெம்பண்ணா அறிக்கை வெளியானால், முதல்வரின் வேட்டி, சட்டை கறுப்பாகும். எவ்வளவு பாதுகாப்பு
நகர வளர்ச்சி துறை அமைச்சர் பைரதி சுரேஷ், ஹெலிகாப்டரில் வந்து, மூடாவின் அனைத்து கோப்புகளையும் கொண்டு சென்றுள்ளார். மூடா அலுவலகத்துக்கு இவ்வளவு பாதுகாப்பு ஏன். மூடாவில் ஊதியம் வழங்க மாதந்தோறும் 5 கோடி ரூபாய் வேண்டும். ஆனால் இரண்டு மாதமாக, பாதுகாப்புக்கு மட்டுமே 10 கோடி ரூபாயை செலவிட்டுள்ளனர்.மூடாவில் எந்த வேலையும் நடப்பது இல்லை. மூடா முறைகேடு தொடர்பான விசாரணைக்கு, ஒரு நபர் அடங்கிய ஆணையம் அமைத்துள்ளார்.அந்த, 'ஒன் மேன் கமிஷன்' குமாரகிருபாவில் இருந்து, 'ஆப்பரேட்' ஆகிறது. ஒன் மேன் கமிஷனின் மேஜை, இருக்கைக்காக 1.5 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். குறைந்த விலை
இதேபோல், தன்னிச்சையாக முடிவு செய்து, ஜிந்தால் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்த 3,667 ஏக்கர் நிலத்தை ஏக்கருக்கு 1.15 லட்சம் ரூபாய் வீதம் விற்றுள்ளார். ஜிந்தாலுக்கு அளித்த நிலத்தில், விலை மதிப்புள்ள கனிம வளம் உள்ளது. 62 சதவீதம் கனிம வளம் உள்ள நிலத்தை, குறைந்த விலைக்கு விற்றுள்ளனர்.ஜிந்தாலுக்கு அளிக்கப்பட்ட நிலத்துக்கு, விலை மதிப்பிடவே முடியாது. 2017ல் சட்டத்துறை ஆலோசனையை அலட்சியப்படுத்தினர்.நிலத்தின் மதிப்பு, பூமிக்குள் உள்ள இரும்புத்தாது அளவை மனதில் கொண்டு, நிலத்தை விற்க வேண்டும் என, சட்டத்துறை அறிக்கை அளித்துள்ளது.இந்த அறிக்கையை பொருட்படுத்தாமல், அரசின் நிலத்தை மற்றவருக்கு கொடுத்தனர். இதனால் அரசு கருவூலத்துக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தன் மனைவிக்கு நிவாரணமாக அளிக்கப்பட்ட 14 மனைகளின் விலை, 62 கோடி ரூபாய் என, சித்தராமையா கூறுகிறார். ஆனால் 3,667 ஏக்கர் நிலத்தை, ஜிந்தாலுக்கு 52 கோடி ரூபாய்க்கு விற்றது, எந்த விதத்தில் நியாயமாகும். இது குறித்து, விசாரணை நடத்த இணை கமிட்டி அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
அரசு மோசடி'
பா.ஜ., - எம்.எல்.ஏ., அரவிந்த் பெல்லத் பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:கர்நாடகாவில் 2023ல் அதிக பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், 15 மாதங்களில், ஒன்றன் பின் ஒன்றாக ஊழல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மூடா ஊழல் விசாரணை, முதல்வர் வீட்டு வாசலுக்கு வந்துவிட்டது. மாநிலம் முழுதும் அவர் மீது கோபம் ஏற்பட்டு உள்ளது. ஜிந்தால் நிறுவனத்திடம் உள்ள நிலத்தை 1970 - 71ல் மத்திய அரசு கையகப்படுத்தியது. இந்நிலம் விஜயநகரா ஸ்டீல் லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இந்நிறுவனம் மூடப்பட்டது. 9,600 ஏக்கர் நிலத்தை, 13 கோடி ரூபாய்க்கு மாநில அரசுக்கு மத்திய அரசு கொடுத்தது.இதில் 3,700 ஏக்கர் நிலம், 2006 - 2007 கால கட்டத்தில் ஜிந்தால் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. தற்போது மீண்டும், அந்நிறுவனத்திற்கு, 3,666 ஏக்கர் நிலத்தை, தலா ஒரு ஏக்கர், 1.20 லட்சம் முதல் 1.50 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளது. மிக குறைந்த விலைக்கு கொடுத்து சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, மோசடி செய்துள்ளது.சந்தை விலையில் ஒரு ஏக்கர் நிலம் 50 லட்சம் ரூபாயில் இருந்து 1.25 கோடி ரூபாய் வரை விற்பனையாகிறது. பல ஊழல்களில் சிக்கி உள்ள சித்தராமையா, தற்போது ஜிந்தால் நிறுவனத்துக்கு குறைந்த விலையில் நிலம் ஒதுக்கி, மற்றொரு ஊழலுக்கு துணை போயுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.