உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நான் எங்கும் தப்பி ஓடவில்லை

நான் எங்கும் தப்பி ஓடவில்லை

பெங்களூரு: 'போக்சோ' வழக்கில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை கைது செய்ய, போலீசார் தயாராக இருந்த வேளையில், கர்நாடக உயர்நீதிமன்றம் கண்டித்தது. 'நான் எங்கும் தப்பி ஓடவில்லை' என முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆவேசமாக கூறியுள்ளார்.முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிடம் உதவி கேட்டு, கடந்த பிப்ரவரி 2ம் தேதி, மமதா, 55, என்ற பெண், தன் 17 வயது மகளுடன், அவரது டாலர்ஸ் காலனி வீட்டுக்கு சென்றுள்ளார். இதையடுத்து, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தாவை தொடர்பு கொண்டு, உதவி செய்யுமாறு எடியூரப்பா பரிந்துரைத்துள்ளார்.

'போக்சோ'

இந்நிலையில் எடியூரப்பா, தன் மகளை அறைக்குள் அழைத்துச் சென்று, பாலியல் ரீதியாக சீண்டியதாக, அப்பெண், சதாசிவ நகர் போலீசில், மார்ச் 14ம் தேதி புகார் செய்தார். எடியூரப்பா மீது 'போக்சோ' வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இவ்வழக்கு, சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அப்பெண், மே 27ல் உயிரிழந்தார்.

போலீசார் சம்மன்

இதன் பின், தன் மீதான வழக்கை ரத்து செய்யும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் எடியூரப்பா மனுத் தாக்கல் செய்தார். இதனால், விசாரணைக்கு ஆஜராகும்படி சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் ஆஜராகாததால், அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கும்படி, சி.ஐ.டி., தரப்பில், பெங்களூரு 51வது சிட்டி சிவில் மற்றும் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் கீழமை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், எடியூரப்பாவுக்கு கைது வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. டில்லியில் இருந்த அவரை கைது செய்ய, சி.ஐ.டி., அதிகாரிகள் விரைந்தனர். இதனால் முன்ஜாமின் கேட்டும், கைது செய்ய தடை விதிக்கக் கோரியும், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் எடியூரப்பா தரப்பில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இவ்விரு மனுக்களுடன் ஏற்கனவே வழக்கை ரத்து செய்ய கோரிய மனு உட்பட மூன்று மனுக்களையும் சேர்ந்து, உயர்நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் விசாரணை நடந்தது.

தடை

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், 'மேலோட்டத்துக்கு வேண்டுமென்றே விசாரணை நடத்துவது தெரிகிறது. அவருக்கு வயதாகிறது. அவர், 17ம் தேதி விசாரணைக்கு ஆஜராவதாக தெரிவித்துள்ளார். அடுத்த இரண்டு வாரங்களுக்கு அவரை கைது செய்யக்கூடாது. கீழமை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை' என உத்தரவிட்டது.

மறுப்பு

டில்லியில் இருந்து நேற்று பெங்களூரு திரும்பிய எடியூரப்பா அளித்த பேட்டி:உயர் நீதிமன்றத்தில் அரசு கூறியது போன்று, வாரன்டை தவிர்க்க, நான் டில்லி செல்லவில்லை. முன்கூட்டியே ஒப்புக்கொண்ட கட்சி பணிகள் காரணமாக சென்றிருந்தேன். நான் எங்கும் தப்பி ஓடவில்லை. 'கைது செய்யக்கூடாது' என கர்நாடக உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டு உள்ளது.திங்கட்கிழமை (நாளை) விசாரணைக்கு ஆஜராவேன். இதுகுறித்து ஏற்கனவே போலீசிடம் தெரிவித்திருந்தேன். நான் யாரையும் குறை கூற விரும்பவில்லை. அனைத்திற்கும் காலம் பதிலளிக்கும். எதார்த்தம் என்னவென்று மக்களுக்கு தெரியும். எனக்கு எதிராக சதி செய்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ