பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பால் அரசுக்கு நெருக்கடி
கர்நாடகாவில் பாலியல் வன்முறை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள், நாளுக்கு நாள் அதிகரிப்பதால், காங்கிரஸ் அரசு நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதை வைத்து எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை உள்ளது.கர்நாடகாவின் பெங்களூரு உட்பட பல்வேறு நகரங்களில் பெண்கள், சிறுமியர் பலாத்காரத்துக்கு ஆளாகும் சம்பவங்கள் நடக்கின்றன. போலீஸ் துறையின் புள்ளி விபரங்களின் படி, நடப்பாண்டு ஜனவரி முதல் ஜூலை வரை கர்நாடகாவில் 340 பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன.ஆகஸ்ட்டில் நடந்த சம்பவங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். பதிவான 340 வழக்குகளில் 234 வழக்குகள் விசாரணை கட்டத்தில் உள்ளன. 106 வழக்குகளில் இன்னும் விசாரணையே துவங்கவில்லை. சில நாட்களுக்கு முன்பு, உடுப்பியில் பாலியல் வன்கொடுமை நடந்தது.இதனால் கர்நாடக மாநிலம், பெண்களுக்கு பாதுகாப்பானது இல்லை என்ற கருத்து எழுந்துள்ளது. உள்துறை மீது மக்கள் நம்பிக்கையை இழப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.வால்மீகி மேம்பாட்டு ஆணையம், 'மூடா' முறைகேடு குற்றச்சாட்டில் சிக்கி, காங்கிரஸ் அரசு தத்தளிக்கும் நிலையில், மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது, அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை முன்வைத்து, எதிர்க்கட்சியினர் குடைச்சல் கொடுக்கின்றனர்.இது தொடர்பாக, 'எக்ஸ்' வலைதளத்தில் பா.ஜ., கூறியிருப்பதாவது:மாநில மக்கள் விரும்புவது, வீட்டில் இருந்து வெளியே சென்ற லட்சுமி (பெண்கள்) பாதுகாப்பாக திரும்பும் திட்டத்தை மட்டுமே. கிரஹலட்சுமி திட்டத்தை செயல்படுத்தியதாக, பெருமை பேசும் ஊழல் முதல்வர் சித்தராமையா, இதை புரிந்து கொள்ள வேண்டும்.மாநிலத்தில் காங்கிரஸ் அரசு வந்த பின், சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த ஏழு மாதங்களில், 340 பலாத்கார சம்பவங்கள் நடந்திருப்பது, மாநிலமே தலைகுனிய கூடிய விஷயமாகும். பெண்களை மிரட்டி, பலாத்காரங்கள் நடக்கின்றன. இத்தகைய சம்பங்களை கட்டுப்படுத்துவதில், அக்கறை காட்டாத உள்துறை அமைச்சர் பரமேஸ்வருக்கு, இறைவனே பாடம் புகட்ட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அவசர தேவைக்கு...பெண்கள், சிறுமியர் பாதுகாப்புக்காக, பிங் ஹொய்சாளா, மகளிர் போலீஸ் நிலையம், மகளிர் சிறப்பு போலீஸ் படை, இரவு ரோந்து அதிகரிப்பு உட்பட, பலவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவசர தேவை உள்ளோர் மகளிர் சஹாய வாணியை தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் 1091 அல்லது 080 - 2294 3225.- நமது நிருபர் -