பா.ஜ., அலுவலகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
பெங்களூரு : கர்நாடக பா.ஜ., அலுவலகத்தை தகர்க்க பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக வெளியான தகவலால், அலுவலகத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு வழக்கில், நேற்று முன்தினம் என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது. அதில், மாநில பா.ஜ., அலுவலகத்தை தகர்க்க பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததால், ராமேஸ்வரம் கபேவில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. இதனால், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து, பா.ஜ., அலுவலகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அலுவலக நுழைவு வாயிலில், ஏற்கனவே மெட்டல் டிடெக்டர் கருவி அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், யாரும் அதன் வழியாக வருதில்லை.தற்போது யாராக இருந்தாலும், இந்த மெட்டல் டிடெக்டர் கருவி வழியாக தான் உள்ளே நுழைய வேண்டும். அத்துடன் நான்கைந்து போலீசாரும் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டு உள்ளனர். மல்லேஸ்வரம் போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., ஆகியோர் தினமும் பா.ஜ., அலுவலகத்துக்கு சென்று ஆய்வு செய்கின்றனர்.