உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொள்கைகளை விமர்சிக்க கூடாதா? தேர்தல் கமிஷனுக்கு சிதம்பரம் கேள்வி

கொள்கைகளை விமர்சிக்க கூடாதா? தேர்தல் கமிஷனுக்கு சிதம்பரம் கேள்வி

புதுடில்லி, “அரசின் கொள்கைகளை விமர்சிப்பது எதிர்க்கட்சிகளின் உரிமை. அப்படியிருக்கையில், 'அக்னிபத்' திட்டத்தை அரசியலாக்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி இருப்பது மிகவும் தவறானது,” என, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.

சமூக வலைதளம்

ஜாதி, சமூகம், மொழி, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்தல் பிரசாரம் செய்வதை நிறுத்தும்படி, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தலைமை தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் அறிவுறுத்தியது.மேலும், மத்திய அரசின் அக்னிபத் திட்டம் குறித்து காங்., மூத்த தலைவர்கள் விமர்சித்த நிலையில், ஆயுதப் படைகளின் சமூக பொருளாதார அமைப்பு குறித்து பிளவு படுத்தக்கூடிய அறிக்கைகளை வெளியிட்டு அரசியலாக்க வேண்டாம் என்றும் காங்கிரஸ் கட்சியை கேட்டுக் கொண்டது.இது குறித்து காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவு:அரசியலாக்க வேண்டாம் என்றால் என்ன அர்த்தம்? விமர்சனத்தை தான் அவர்கள் அவ்வாறு குறிப்பிடுகின்றனரா? அரசின் கொள்கைகளை விமர்சிப்பது எதிர்க்கட்சிகளின் உரிமை.

ஓய்வூதியம்

ஒன்றாக இணைந்து பணியாற்றும் வீரர்களை இரண்டு பிரிவுகளாக அக்னிவீர் பிரிக்கிறது. இளைஞர்களுக்கு ஆயுதப்படையில் நான்கு ஆண்டுகள் பணி அளித்துவிட்டு, பின் அவர்களுக்கு ஓய்வூதியம் கூட வழங்காமல் துாக்கி எறிவதே அக்னிவீர் திட்டம்.இதற்கு நம் ராணுவமே எதிராக உள்ளது. அரசின் நிர்ப்பந்தத்தால் அந்த திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது துாக்கி எறியப்பட வேண்டிய திட்டம்.ஒரு குடிமகனாக அரசின் கொள்கைகளை விமர்சிப்பது என் உரிமை. அதை செய்ய வேண்டாம் என தேர்தல் கமிஷன் கூறுவது மிகப் பெரிய தவறு.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தயக்கம் ஏன்?

ஓட்டுச்சாவடி வாரியாக பதிவான ஓட்டு விபரங்களை இணையதளத்தில் வெளியிடுவது தேர்தல் நடைமுறையை சீர்குலைக்கும் என, உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் பதில் அளித்துள்ளது. இது குறித்து, மூத்த வழக்கறிஞரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான கபில் சிபல் நேற்று கூறியதாவது:ஓட்டுச்சாவடியில் பதிவாகும் ஓட்டு விபரங்கள் அடங்கிய 17சி விண்ணப்பத்தை இணையதளத்தில் வெளியிட சட்ட ரீதியான அனுமதி இல்லை என, தேர்தல் கமிஷன் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒருவேளை பதிவான ஓட்டுகளை விட, இறுதியில் எண்ணப்பட்டு வெளியாகும் ஓட்டுகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் என்ன செய்வது? இந்த விபரங்களை வெளியிட தேர்தல் கமிஷன் தயங்குவதால், அதில் ஏதோ தவறு இருப்பதாக பிற கட்சிகள் சந்தேகப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

shyamnats
மே 24, 2024 21:45

பாகிஸ்தானுக்கு இந்திய நோட்டு அடிக்கும் இயந்திரத்தை விற்ற போது , இந்த மாதிரி கொள்கைகளை பொது வெளியில் விவாதித்த மாதிரியா?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை