உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குப்பை கொட்டும் இடமா கோலார்? கோளாறு நடவடிக்கையால் சர்ச்சை!

குப்பை கொட்டும் இடமா கோலார்? கோளாறு நடவடிக்கையால் சர்ச்சை!

தலைநகர் பெங்களூரு வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு வரும் கர்நாடக ஆட்சியாளர்கள், மற்ற நகரங்கள் எக்கேடு கெட்டால் என்ன என்று கருதுவது போன்ற நிலைமை உள்ளது.கர்நாடகாவில் முக்கிய தொழில் நகரமாக ஆரம்பத்தில் உருவான நகரம் கோலார் மாவட்டத்தின் தங்கவயல். அதன் பின்தான் பெங்களூரு, துமகூரு, மாண்டியா, ஷிவமொகா, ஹூப்பள்ளி என பல மாவட்டங்கள் தொழில் வளத்தில் முன்னேற்றம் கண்டு வளர்ந்தன.தெற்கு ஆசியாவில் முதல் நீர்மின் நிலையம் உருவாக்கப்பட்டதே தங்கவயலில் உள்ள தங்கச்சுரங்க தொழிலுக்காக தான். தொலைபேசி, ஆம்புலன்ஸ், எக்ஸ் ரே கருவி ஆகியவை, தங்கவயலில் தான் முதன் முதலில் பயன்பாட்டுக்கு வந்தன. சர்வதேச அளவில் இந்நகரம் பெருமை பெற்று விளங்கியது.சுதந்திர இந்தியாவின் முதல் ஐந்தாண்டு திட்டத்தை நிறைவேற்ற உலக வங்கியில் கடன் வாங்க மூலதனமாக இருந்தது, தங்கச் சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்பட்ட தங்கம் தான் என்பதை வரலாறு கூறுகிறது.இத்தகைய பெருமை மிக்க தங்கவயல். 'லிட்டில் இங்கிலாந்து' என்ற புகழ் பெற்றது. தங்கம் விளைந்த தங்கச் சுரங்கத்தை பல்வேறு காரணங்களால் 2001ல் மூடிவிட்டனர். அதன்பின், இந்நகருக்கு படிப்படியாக பின்னடைவு ஏற்பட்டது.

60 டன் குப்பை

தங்கவயல் நகராட்சியில் 35 வார்டுகள் உள்ளன. நாள்தோறும் 60 டன் குப்பை கழிவுகள் சேருகின்றன. இதில், 50 டன் குப்பை கழிவுகளை அகற்ற தேவையான தொழிலாளர்கள், வாகனங்கள், இயந்திரங்கள் இல்லை. குப்பை கழிவுகள் கொட்ட போதிய இடம் இல்லை என்பதை நகரமும், மாநிலமும் அறியும்.ஆனால், தலைநகர் பெங்களூரு குப்பைகளை, 100 கி.மீ., தொலைவில் உள்ள தங்கவயலில் கொட்டுவதற்கு, துணை முதல்வர் சிவகுமார் தலைமையிலான நகர வளர்ச்சித்துறை முடிவெடுத்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளன.இந்த குப்பை கழிவுகளை துமகூரு மாவட்டத்தில் முதலில் கொட்ட திட்டமிட்டனர். ஆனால், பொறுப்பு அமைச்சர் ராஜண்ணா, அரசுக்கு நெருக்கடி கொடுப்பார் என்ற அச்சத்தில் கைவிடப்பட்டது.ராம்நகர் மாவட்டத்தில் கொட்டலாம் என்றால், துணை முதல்வர் சிவகுமார் மற்றும் மத்திய அமைச்சர் குமாரசாமி இருவருமே அனுமதிக்க மாட்டார்கள் என்பதால், அங்கு கொட்ட வாய்ப்பு இல்லை.

'வெயிட்' இல்லை

இதுபோல், மாண்டியா மாவட்டத்தில் கொட்டுவதற்கு காங்கிரஸ், ம.ஜ.த., - பா.ஜ., என மூன்று கட்சிகளுமே கண்டிப்பாக எதிர்ப்பு தெரிவிக்கும். ஷிவமொகாவில் கொட்டுவதற்கு எடியூரப்பா, ராகவேந்திரா, விஜயேந்திரா, குமார் பங்காரப்பா, என பலரும் கடுமையாக எதிர்ப்பர் என்பது உறுதி.இதனால் தான், கர்நாடக அரசின் பார்வை, கோலார் மாவட்டத்தின் மீது பதிந்துள்ளது. இங்குள்ள தலைவர்களின், 'வெயிட்' பற்றி அவர்கள் தெரிந்து வைத்து உள்ளதால், தங்கவயலை தேர்ந்தெடுத்து உள்ளனர்.இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இத்திட்டம் 20 ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தது. பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சராக இருந்த ரோஷன் பெய்க், அதன்பின் அமைச்சராக இருந்த ஜார்ஜ் ஆகியோரும் கூட குப்பை கொட்டும் திட்டம் பற்றி பேசி உள்ளனர்.இதை வலுவாக எதிர்ப்பதற்கு, எதிர்க்கட்சியில் பலமான அரசியல் தலைமை இல்லை. ஆளுங்கட்சியிலும் கூட இரு கோஷ்டிகள் எதிரும், புதிருமாக உள்ளனர். நாள்தோறும் 25,000 முதல் 40,000 டன் வரை குப்பை கழிவுகளை கொண்டு வந்து கொட்டப்படும் என பெங்களூரு மாநகராட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த குப்பை கழிவுகளில் இருந்து உரம், மின்சாரம், எரிவாயு தயாரிப்பது குறித்து, தமிழகத்திற்கு கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் சென்று பார்வையிட்டு வந்திருக்கிறார். எனவே, குப்பை கொட்டும் பணிகள் விரைவில் துவங்கலாம் என தெரிகிறது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை