உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிவகுமாரின் டில்லி பயணம்: முதல்வர் தரப்புக்கு ஆப்பு?

சிவகுமாரின் டில்லி பயணம்: முதல்வர் தரப்புக்கு ஆப்பு?

துணை முதல்வர் சிவகுமாரின் டில்லி பயணம், முதல்வர் தரப்புக்கு ஆப்பு வைக்கவா என்று கேள்வி எழுந்துள்ளது.கர்நாடக சட்டசபைக்கு காலியாக இருந்த மூன்று தொகுதிகளுக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றது.இந்த தேர்தலுக்கு முன்பே, காங்கிரஸ் வெற்றி பெற்றால், துணை முதல்வர் சிவகுமார் முதல்வர் ஆவார் என்ற பேச்சு அடிபட்டது. ஆனால் தேர்தலில் மூன்று இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றதை, முதல்வர் தரப்பு தங்களுக்கு சாதகமாக்கி கொண்டனர்.

புகார் மடல்

'முடா' வழக்கில் சித்தராமையா மீது எதிர்க்கட்சிகள் பொய் குற்றச்சாட்டு கூறியதை மக்கள் நம்பவில்லை. இதனால் மூன்று தொகுதிகளிலும் காங்கிரசை ஆதரித்துள்ளனர் என்று கூறி, சிவகுமார் தரப்புக்கு 'செக்' வைத்தனர்.இந்நிலையில், காங்கிரஸ் தலைவராக இருக்கும் சிவகுமாரை அந்தப் பதவியில் இருந்து நீக்கும் முயற்சியும், முதல்வர் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.முதல்வரின் அணியை சேர்ந்த அமைச்சர்கள் பரமேஸ்வர், சதீஷ் ஜார்கிஹோளி, ராஜண்ணா ஆகியோர் வரிசையாக டில்லி சென்று சிவகுமாரை பற்றி புகார் மடல் வாசித்து விட்டு வந்தனர். ஆனால் அதற்கு மேலிடம் செவி சாய்க்கவில்லை என்று தெரிகிறது.

துபாய் சுற்றுலா

இதனால் அதிருப்தி அடைந்த பரமேஸ்வர், 'தொண்டர்கள் கூறினால் எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவும் தயார்' என்று கூறியதன் மூலம், கட்சி மேலிடத்திற்கு எச்சரிக்கை விடுத்தார். இதற்கிடையில் அடுத்த சட்டசபை தேர்தலை எனது தலைமையில் தான் காங்கிரஸ் சந்திக்கும் என்று சிவகுமார் கூறியது, முதல்வர் தரப்பை மேலும் எரிச்சல் அடைய செய்தது.இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், துணை முதல்வர் சிவகுமார் தனது குடும்பத்தினருடன் ஒரு வார காலம் துபாய் சுற்றுலா சென்று விட்டு நேற்று முன்தினம் பெங்களூரு திரும்பினார். கடந்த சட்டசபை தேர்தலில் தோற்று போனவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அடுத்த சட்டசபை தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

அர்த்தம் இல்லை

இந்நிலையில் கர்நாடகாவில் மேற்கொள்ள வேண்டிய நீர் பாசன திட்டங்கள் குறித்து விவாதிக்க, மத்திய ஜல்சக்தி அமைச்சர் சி.ஆர். பாட்டீலை சந்தித்து பேச, சிவகுமார் நேற்று டில்லி புறப்பட்டு சென்றார்.பெங்களூரு விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:கட்சிக்காக தீவிரமாக பணியாற்றுவோருக்கு பதவிகளை வழங்க வேண்டும் என்று, கட்சி மேலிடம் எனக்கு அறிவுறுத்தியுள்ளது. தாலுகா மட்டத்தில் இரவும், பகலும் உழைப்பவர்களுக்கு கட்சி பொறுப்பு வழங்கப்படும். தலைவர்களுக்கு பின்னால் ஒதுங்கி நிற்பவர்களை நியமிப்பதில் எந்த பயனும் இல்லை. யாருக்கு பதவி வழங்க வேண்டும் என்று பட்டியல் தயாராக உள்ளது. கூடிய விரைவில் மேலிடத்திடம் தாக்கல் செய்யப்படும். உள்ளூர் மட்டத்தில் நாள் முழுதும் பணியாற்றுவோர் எங்களுக்கு தேவை. மற்றவர்களின் அழுத்தத்தின் கீழ் ஒருவரை பதவியில் அமர்த்தி நேரத்தை வீணடிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.அதாவது, அமைச்சர்கள் பரிந்துரை செய்யும் நபர்களுக்கு பதவி வழங்கப்பட மாட்டாது என்பதை சிவகுமார் சூசகமாக கூறியுள்ளார்.டில்லி செல்லும் சிவகுமார், கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார்.கர்நாடகாவில் புதிதாக கட்டப்படவுள்ள காங்கிரஸ் அலுவலக பூமி பூஜையில் பங்கேற்க வரும் படி அழைப்பு விடுக்கும் அவர், சித்தராமையா தரப்பினர் செய்யும் சேட்டைகள் குறித்தும் புகார் அளிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.- -நமது நிருபர் --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ