உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தங்கம் கடத்தலில் நடிகையின் தந்தைக்கு தொடர்பு உள்ளதா? விசாரிக்க கர்நாடக அரசு குழு அமைப்பு

தங்கம் கடத்தலில் நடிகையின் தந்தைக்கு தொடர்பு உள்ளதா? விசாரிக்க கர்நாடக அரசு குழு அமைப்பு

பெங்களூரு, : தங்கம் கடத்தலில், நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தையான ஏ.டி.ஜி.பி., ராமச்சந்திர ராவுக்கு தொடர்பு உள்ளதா என்று விசாரிக்க, கூடுதல் தலைமை செயலர் கவுரவ் குப்தா தலைமையில், கர்நாடக அரசு குழு அமைத்துள்ளது.கர்நாடக வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்பு துறை கூடுதல் டி.ஜி.பி., ராமச்சந்திர ராவ். இவரது வளர்ப்பு மகள் ரன்யா ராவ், 33; நடிகை. இவர், துபாயில் இருந்து பெங்களூருக்கு 12 கோடி ரூபாய் மதிப்பிலான 14.8 கிலோ தங்கக் கட்டிகள் கடத்தி வந்த வழக்கில், வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.ரன்யா ராவ் கொடுத்த தகவலின்படி, அவரது நண்பரும், ஐந்து நட்சத்திர ஹோட்டல் அதிபருமான தருண் கொண்டரு ராஜு கைது செய்யப்பட்டார். தருண், ரன்யா ராவ் இடையில் பல ஆண்டுகளாக நட்பு உள்ளது. தருணுக்கு துபாயிலும் சில தொழில்கள் உள்ளன.தருணுக்காகவே, ரன்யா ராவ் துபாய், அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் இருந்து, தங்க கட்டிகளை கடத்தி வந்துள்ளார். 'ஐ.பி.எஸ்., அதிகாரி மகள்' என்று கூறிவிட்டு, விமான நிலைய சோதனை நடவடிக்கையில் இருந்து ரன்யா ராவ் தப்பி வந்துள்ளார். ரன்யா ராவ் ஒவ்வொரு முறை துபாய் சென்று திரும்பும் போதும், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பேசிய ராமச்சந்திர ராவ், 'என் மகள் துபாயில் இருந்து வருகிறார். என் குடும்பத்திற்கு அளிக்கப்படும் பாதுகாப்பின் கீழ், அவரை வெளியே அழைத்து வர வேண்டும். எந்த சோதனையும் செய்ய வேண்டாம்' என்று கூறியதாக தகவல் வெளியானது.இதையடுத்து, இந்த வழக்கில் ராமச்சந்திர ராவுக்கும் தொடர்பு உள்ளதா என்பது பற்றி விசாரிக்க, கூடுதல் தலைமை செயலர் கவுரவ் குப்தா தலைமையில், கர்நாடக அரசு நேற்று ஒரு குழுவை அமைத்து உள்ளது. ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் குழுவுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. ரன்யா ராவும், அவரது கணவர் ஜதினும் பல ஆண்டுகளாக காதலித்து, மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்தனர். ரன்யா அடிக்கடி துபாய் சென்ற விவகாரத்தில் கணவன் - மனைவி இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. ரன்யா ராவ் துபாய் செல்வது குறித்து, அமைச்சர் ஒருவரிடம் ஜதின் கூறியதாகவும், அந்த அமைச்சரின் அலுவலகத்தில் இருந்தே, வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை