புதுடில்லி: ஹரியானாவில் கடந்த பிப்ரவரி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சம்பு எல்லையில், தேசிய நெடுஞ்சாலையில் போடப்பட்டுள்ள தடுப்புகளை உடனடியாக அகற்றும்படி, மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.விவசாய விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்ட உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியானாவைச் சேர்ந்த சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்துார் மோர்ச்சா சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள், கடந்த பிப்ரவரியில், டில்லியை முற்றுகையிடும் போராட்டத்தை துவங்கினர். உத்தரவு
இவர்கள் டில்லியை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தும் நோக்கில், ஹரியானாவின் அம்பாலா - டில்லி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சம்பு எல்லையில், போலீசார் சாலையில் தடுப்புகளை அமைத்தனர். விவசாயிகள் தடுப்புகளை தாண்டி முன்னேற முயன்றபோது ஹரியானா போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில், சுப்கரண் சிங் என்ற 21 வயது இளைஞர் உயிரிழந்தார்.இது தொடர்பாக, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கும்படி பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்தது. இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.இதற்கிடையே, நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புகளை அகற்ற ஹரியானா அரசு மறுத்ததை அடுத்து, சம்பு எல்லையில் விவசாயிகளின் போராட்டம் இப்போதும் தொடர்கிறது. இதைத் தொடர்ந்து சம்பு எல்லையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை ஏழு நாட்களுக்குள் அகற்றும்படி ஹரியானா அரசுக்கு பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம் கடந்த 10ம் தேதி உத்தரவிட்டது. மேல் முறையீடு
இந்நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை கமிட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா அரசு தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, சம்பு எல்லையில் தடுப்புகளை அகற்றும்படி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக ஹரியானா அரசு தரப்பு தெரிவித்தது.இதைக் கேட்ட நீதிபதி உஜ்ஜல் புயான், ''மாநில அரசு நெடுஞ்சாலையை எப்படி மூட முடியும்? போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதே உங்கள் பணி. தடுப்புகளை உடனே அகற்றுங்கள். போக்குவரத்தை ஒழுங்குபடுத்துங்கள்,'' என்றார்.அமர்வில் இடம்பெற்று இருந்த மற்றொரு நீதிபதி சூர்ய காந்த், ''உயர் நீதிமன்ற உத்தரவை ஏன் எதிர்க்க விரும்புகிறீர்கள்? விவசாயிகளும் இந்த நாட்டின் குடிமகன்கள் தான். அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதிகளை செய்து கொடுங்கள். அவர்கள் ஊர்வலமாக வந்து கோஷம் எழுப்பிவிட்டு திரும்பி விடுவர். நீங்கள் சாலை மார்க்கமாக பயணிப்பதில்லை என நினைக்கிறேன்,'' என்றார்.பிராமண பத்திரம்
'சாலையில் தான் பயணிக்கிறோம்' என, அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.இதைக் கேட்ட நீதிபதிகள், 'அப்படியானால், நீங்களும் சிரமங்களை அனுபவித்து இருப்பீர்கள். நெடுஞ்சாலையில் போடப்பட்டுள்ள தடுப்புகளை உடனடியாக அகற்றுங்கள்' என, உத்தரவிட்டனர்.மேலும், நிலுவையில் உள்ள விவகாரத்தில் அடுத்தக்கட்ட முன்னேற்றங்கள் குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்படியும் ஹரியானா அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.