உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐ.டி., ஊழியர்கள் வருகை குறைவு மெட்ரோ ரயில் வருவாய் பாதிப்பு

ஐ.டி., ஊழியர்கள் வருகை குறைவு மெட்ரோ ரயில் வருவாய் பாதிப்பு

பெங்களூரு: பெங்களூரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஐ.டி., நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற கூறியுள்ளது. இதனால் ஐ.டி., நிறுவனங்கள் அதிகம் உள்ள, ஒயிட் பீல்டு - செல்லக்கட்டா வழி தடத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு வருவாய் குறைந்து உள்ளது.கர்நாடகாவில் கடந்தாண்டு மழை பற்றாக்குறையால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. விவசாயத்துக்கு தண்ணீர் இன்றி, விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. பெங்களூரில் தண்ணீர் செலவிடுவதில், பெங்களூரு மாநகராட்சி, ஜல் மண்டல் நிர்வாகம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது மெட்ரோ ரயில் சேவையையும் பாதித்துள்ளது.

ஐ.டி.,க்காக மெட்ரோ

பெங்களூரில் உள்ள சீதோஷ்ண நிலை, உள்கட்டமைப்பு காரணமாகவே, பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இங்கு அமைந்து உள்ளன. இவர்கள், தங்கள் போக்குவரத்துக்கு மெட்ரோ ரயிலை பயன்படுத்துவதால், மெட்ரோ நிர்வாகத்துக்கு வருவாய் அதிகரித்து வந்தது.ஆனால் கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாக உள்கட்டமைப்பில் ஏற்பட்ட தடையை நீக்க ஆளும் அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பல ஐ.டி., நிறுவனங்கள், பெங்களூரை விட்டு வெளியேறுவதாக அரசை எச்சரித்து வருகின்றன. ஆனால் அரசு கண்டுகொள்ளவில்லை.கொரோனா காலத்தில், தங்கள் ஊழியர்களை அவரவர் வீடுகளில் இருந்து பணியாற்றும் படி அந்நிறுவனங்கள் கூறியது, அது போன்று, தற்போதும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.பலரும், பெங்களூரில் தாங்கள் தங்கி உள்ள வீடுகளில் இருந்தபடியும், மேலும் சிலர் தங்கள் சொந்த ஊருக்கு சென்று அங்கிருந்தபடியே பணியாற்றி வருகின்றனர்.

40,000 பேர் குறைவு

நகரில் பல பகுதிகளில் இயங்கிய மெட்ரோ ரயிலில், தினமும் 7.10 லட்சம் பயணியர் பயணித்து வந்தனர். பையப்பனஹள்ளி - கே.ஆர்.,புரம் மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கிய பின், வழித்தடத்தில் 7.80 லட்சம் பேர் பயணிப்பர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்மறையாக, 6.60 லட்சம் பேர் மட்டுமே பயணித்து வருகின்றனர்.பலரும் வீட்டிலிருந்து பணி செய்வதால், ஐ.டி., நிறுவனங்கள் அதிகம் உள்ள, ஒயிட் பீல்டு - செல்லக்கட்டா வழி தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயிலில் கூட்டம் குறைந்தது. கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது, மார்ச் மாதத்தில் 40,000 பயணியர் குறைந்துள்ளனர். இதனால் நாள் தோறும், 70 ஆயிரம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ