உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குதிரை பந்தயத்துக்கு இடைக்கால தடை கர்நாடக ஹைகோர்ட் உத்தரவு

குதிரை பந்தயத்துக்கு இடைக்கால தடை கர்நாடக ஹைகோர்ட் உத்தரவு

பெங்களூரு: பெங்களூரில் குதிரை பந்தயம் நடத்த ஒரு நபர் அமர்வு அளித்த அனுமதிக்கு, கர்நாடக உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை விதித்துள்ளது.பெங்களூரு ரேஸ் கோர்ஸ் சாலையில், ரேஸ் கோர்ஸ் எனும் குதிரை பந்தய மைதானம் உள்ளது. இங்கு குதிரை பந்தயங்கள் நடந்து வந்தன. குதிரை பந்தயத்தை மையமாக வைத்து, சட்டவிரோத செயல்கள் நடந்ததால், குதிரை பந்தயம் நடத்த அரசு தடை விதித்திருந்தது.இதை எதிர்த்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தில், டர்ப் கிளப், கர்நாடகா பந்தய குதிரை உரிமையாளர்கள் சங்கம், மார்ச்சில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

குதிரைகளுக்கு நோய்

இவ்வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட ஒரு நபர் அமர்வு நீதிபதி கிருஷ்ணகுமார், 'பந்தயங்கள் நடத்தவில்லை என்றால், பந்தயத்தில் ஈடுபடும் குதிரைகளுக்கு நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குதிரை பந்தயம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள விஷயத்தில், அரசு தன்னிச்சையாக செயல்பட்டது தெரிகிறது. சட்டங்களை கடைபிடித்து குதிரை பந்தயம் நடத்திக் கொள்ளலாம்' என தீர்ப்பளித்திருந்தார்.இதை எதிர்த்து, கர்நாடக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு நீதிபதிகள் அன்ஜாரியா, அரவிந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி வாதிடுகையில், ''ரேஸ் கோர்சில் குதிரை பந்தயம் நடத்தும்போது, 'புக்கி'கள் பெரியளவில் மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக, சி.சி.பி., நடத்திய ரெய்டில், பென்சிலில் எழுதி வைத்து பந்தயம் கட்டியவர்களுக்கு டிக்கெட் கொடுத்து, பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.''இதனால் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி ஏமாற்றப்பட்டு உள்ளது. மேலும், ஆட்டோ ஓட்டுனர்கள் உட்பட ஏழை மக்கள், தாங்கள் உழைக்கும் பணத்தை குதிரை பந்தயத்தில் செலவிடுவதால், வாழ்க்கை நடத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, குதிரை பந்தயத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது,'' என்றார்.பெங்களூரு ரேஸ் கோர்ஸ் லிமிடெட், கர்நாடக பயிற்சியாளர்கள் சங்கங்கள், கர்நாடக பந்தய குதிரை உரிமையாளர்கள் சங்கம், கர்நாடக ஜாக்கி சங்கம் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள், 'குதிரை பந்தயம் ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டில் பங்கேற்பதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்து ஜாக்கிகள் பெங்களூரில் ஏற்கனவே குடியேறி உள்ளனர். போட்டிகளை நடத்த ஒற்றை நீதிபதி அமர்வு அனுமதி அளித்துள்ளது. இப்போது போட்டிகளை நடத்த கூடாது என்று அரசு கேட்டால், அதை நம்பி வாழ்க்கையை நடத்துபவர்களுக்கு அது பிரச்னையாக இருக்கும்' என்றனர்.

அடுத்த கட்ட விசாரணை

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 'மேல்முறையீட்டில் அரசு கூறிய அம்சங்களில், குதிரை பந்தயம் நடத்தக்கூடாது என்பதற்கு வலுவான காரணங்களை கூறி உள்ளது. போட்டிகளை நடத்த அனுமதி வழங்கிய ஒரு நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது. விசாரணை முடியும் வரை, பெங்களூரு குதிரை பந்தயம் நடத்த தடை விதிக்கப்படுகிறது. மனு மீதான அடுத்த கட்ட விசாரணை, ஆக., 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ