| ADDED : மே 28, 2024 09:12 PM
திருவனந்தபுரம்,:கேரளாவில் ரவுடி வீட்டில் நடந்த மது விருந்தில் கலந்து கொண்ட டி.எஸ்.பி., சாபு, போலீசாரை பார்த்ததும் கழிப்பறைக்குள் பதுங்கினார். அவரை சஸ்பெண்ட் செய்து, டி.ஜி.பி., உத்தரவிட்டார்.கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே அங்கமாலியை சேர்ந்தவர் தம்மனம் பைசல். இவர் மீது, 50க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. குண்டர் தடுப்பு சட்டம் மற்றும் ஓராண்டு ஊருக்குள் நுழைய தடை போன்ற தண்டனைக்கு உட்பட்டவர்.இரண்டு நாட்களுக்கு முன் இவரது வீட்டில் மது விருந்து நடந்தது. இதில், ஆலப்புழா குற்றப்பிரிவு டி.எஸ்.பி., சாபு மற்றும் சில போலீசார் பங்கேற்றனர். இதையறிந்த அங்கமாலி போலீசார் அங்கு சோதனை நடத்தினர்.போலீசாரை பார்த்ததும் டி.எஸ்.பி., அங்குள்ள ஒரு கழிப்பறையில் பதுங்கினார். இது பற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மது விருந்தில் பங்கேற்ற இரண்டு போலீசார் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.சாபுவை தப்ப வைக்க போலீசில் ஒரு தரப்பினர் முயற்சி மேற்கொண்டனர். கேரள தனிப்பிரிவு போலீசார் முதல்வர் பினராயி விஜயனுக்கு அளித்த அறிக்கை அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர், டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, சாபு நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.