| ADDED : மே 09, 2024 02:26 AM
புதுடில்லி:தெற்கு டில்லியைச் சேர்ந்த 8 வயது சிறுமியைக் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.இதுகுறித்து, டில்லி மாநகரப் போலீசின் தெற்கு மண்டல துணை கமிஷனர் அங்கித் சவுகான் கூறியதாவது:கடந்த 6ஆம் தேதி மாலை 3:00 மணிக்கு கோட்லா முபாரக்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு, 8 வயது சிறுமி கடத்தப்பட்டதாக தகவல் வந்தது. போலீசார் விரைந்து சென்றனர். போலீசுக்கு போன் செய்த குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்தனர். தனிப்படை அமைத்து சிறுமியை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.பாபு பார்க், உதய் சந்த் மார்க், கோட்லா முபாரக்பூர், குருத்வாரா சாலை, தெற்கு விரிவாக்கம் -1, பிலாஞ்சி கிராமம் உள்ளிட்ட இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. குற்றவாளி அடையாளம் காணப்பட்டார்.அதேநேரத்தில், கடத்தப்பட்ட சிறுமியைப் பற்றிய விவரங்கள் 'ஜிப் நெட்' எனப்படும் அண்டை மாநில போலீசுடனான நெட்வொர்க் அமைப்புடன் பகிரப்பட்டது.அந்தேரியா மோட் குடிசைப் பகுதியில் பதுங்கியிருந்த மெஹ்ராலியைச் சேர்ந்த முகமது உமர்,28, நேற்று முன் தினம் இரவு கைது செய்யப்பட்டு, சிறுமியும் மீட்கப்பட்டார்.கண்ணாடி பொம்மை தயாரிக்கும் தொழில் செய்து வரும் உமர், கண்ணாடிகள் வாங்க கோட்லாவுக்கு வந்த இடத்தில், தனியாக விளையாடிக் கொண்டிருந்த சிறுமியைக் கடத்திச் சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, பெற்றோரிடம்ஒப்படைக்கப்பட்டார்.இவ்வாறு அவர் கூறினார்.