உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / l கர்நாடக காங்., தலைவர் சிவகுமாரை மாற்ற... ராகுலிடம் போட்டு கொடுத்த சித்தராமையா

l கர்நாடக காங்., தலைவர் சிவகுமாரை மாற்ற... ராகுலிடம் போட்டு கொடுத்த சித்தராமையா

பெங்களூரு : கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து, துணை முதல்வர் சிவகுமாரை மாற்றுவதற்கு, கட்சி மேலிடம் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ராகுலுக்கு வாழ்த்து கூற சென்ற சாக்கில், சிவகுமாரை பற்றி சித்தராமையா, 'போட்டு' கொடுத்துவிட்டு வந்ததே இதற்கு காரணம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.சட்டசபை தேர்தலில் காங்., ஜெயித்தால், மாநில தலைவராக இருப்பவரே முதல்வர் பதவிக்கு வருவது நடைமுறையில் இருந்தது. கர்நாடகாவின் தற்போதைய உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, 2013 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. ஆனால், பரமேஸ்வர் தேர்தலில் தோற்று போனதால், சித்தராமையா முதல்வர் ஆனார்.* தினேஷ் ராஜினாமாஇந்நிலையில் கடந்த 2020ல், காங்கிரஸ் தலைவராக இருந்த தினேஷ் குண்டுராவ் ராஜினாமா செய்தார். தலைவர் பதவியை பிடிக்க, சிவகுமார் முயன்றார். சிவகுமார் தலைவராகி ஒருவேளை அவரது தலைமையின் கீழ், 2023 சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், தனக்கு முதல்வர் பதவி கிடைக்காமல் போய்விடும் என்று கருதிய சித்தராமையா, சிவகுமாருக்கு மாநிலத் தலைவர் பதவி கிடைக்க விடாமல் தடுக்க பார்த்தார். ஆனாலும், சிவகுமார் மாநில தலைவர் ஆனார். கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் காங்., ஜெயித்ததை அடுத்து, சிவகுமார் முதல்வர் பதவியை பிடிக்க பார்த்தார். ஆனால், சித்தராமையா விடவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியானதும் இருவரும் டில்லி பறந்தனர். முதல்வர் பதவிக்காக, கட்சி மேலிடத்திடம் முட்டி மோதினர்.ஒருவழியாக ராகுல் ஆதரவுடன், சித்தராமையா முதல்வரானார். சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவி கிடைத்தது. சட்டசபை தேர்தல் முடிந்த பின், மாநிலத் தலைவர் பதவியில் இருந்து சிவகுமார் மாற்றப்படுவார் என்று பேச்சு அடிபட்டது. ஆனால், 'லோக்சபா தேர்தல் முடியும் வரை நானே தலைவராக இருக்கிறேன்' என, கட்சி மேலிடத்திடம் சிவகுமார் கோரிக்கை வைத்தார். இதற்கு மேலிடமும் சம்மதித்தது. இந்நிலையில், லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றால், முதல்வர் பதவியை பெறுவதற்கு சிவகுமார் திட்டம் வைத்திருந்தார். ஆனால் வெறும் ஒன்பது இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. சிவகுமாரின் தம்பி சுரேஷும் தோற்று போனார். இது, சிவகுமாருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. * அமைச்சர்கள் வியூகம்லோக்சபா தேர்தல் முடிந்த பின், சித்தராமையாவின் ஆதரவு அமைச்சர்கள், 'கூடுதல் துணை முதல்வர்களை நியமிக்க வேண்டும். மாநில தலைவராக புதியவரை நியமிக்க வேண்டும்' என, குரல் எழுப்ப துவங்கி உள்ளனர். இதனால் சிவகுமாரும், அவரது ஆதரவாளர்களும் கடுப்பாகி உள்ளனர். இதற்கிடையில், மாநில தலைவர் பதவிக்கு அமைச்சர்கள் ஈஸ்வர் கன்ட்ரே, சதீஷ் ஜார்கிஹோளி ஆகியோர் சத்தமே இல்லாமல் காய் நகர்த்தி வருகின்றனர். * ராகுலுக்கு வாழ்த்து இந்நிலையில், புதிதாக சேர்ந்து எடுக்கப்பட்ட கர்நாடக எம்.பி.,க்களுக்கு, விருந்து கொடுப்பதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, சித்தராமையா, சிவகுமார் உள்ளிட்டோர் டில்லி சென்றனர். டில்லியில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்களை சித்தராமையா சந்தித்து பேசினார்.நேற்று முன்தினம் இரவு, லோக்சபா எதிர்க்கட்சி தலைவரான ராகுலை சித்தராமையா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், சமூகநல துறை அமைச்சர் மஹாதேவப்பா ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது, லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றதற்கும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ஆனதற்கும் ராகுலுக்கு, சித்தராமையா வாழ்த்து தெரிவித்தார். * புகார் பட்டியல்அதன்பின், சிவகுமார் மீது புகார் பட்டியலை வாசிக்க ஆரம்பித்துள்ளார். 'லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் 14 இடங்களில் நாம் வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால், சிவகுமாரின் நடவடிக்கையால், பழைய மைசூரில் ஐந்து இடங்களை இழக்க நேரிட்டது. கட்சியின் பல தலைவர்களுக்கு, சிவகுமாரின் அணுகுமுறை பிடிக்கவில்லை. அவரை மாற்ற வேண்டும் என்று பெரும்பாலானோர் விரும்புகின்றனர்.'அமைச்சர்களுடனும், அவருக்கு நல்லுறவு இல்லை. இதனால், அவரை மாநில தலைவர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு, அவருக்கு பதிலாக புதியவர் ஒருவரை நியமிக்க வேண்டும்' என, ராகுலிடம், சித்தராமையா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. சிவகுமார் 2020ல் இருந்து மாநில தலைவராக இருப்பதால், அவரை மாற்றி விட்டு வேறு ஒருவரை தலைவராக நியமிக்க கட்சி மேலிடம் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், மாநில தலைவர் பதவியை விட்டு தர சிவகுமார் தயாராக இல்லை. பெங்களூரு மாநகராட்சி, உள்ளாட்சி தேர்தல்கள் முடியும் வரை, தலைவர் பதவியில் நீடிக்க நினைக்கிறார். சிவகுமாரை மாநில தலைவர் பதவியில் இருந்து இறக்குவதுடன், கூடுதல் துணை முதல்வர்களையும் நியமித்து அவரது அதிகாரத்தை குறைக்க வேண்டும் என, சித்தராமையா தரப்பு திட்டம் வைத்துள்ளது. யாருடைய திட்டம் ஜெயிக்க போகிறது என்பதற்கு, இன்னும் சில நாட்களில் முடிவு தெரிந்துவிடும்.***பாக்ஸ்...--------சுவாமிகள் பேசுவது அர்த்தமற்றது!கடந்த சில நாட்களுக்கு முன், 'சிவகுமாருக்கு முதல்வர் பதவியை சித்தராமையா விட்டு கொடுக்க வேண்டும்' என கூறிய விஸ்வ ஒக்கலிக மஹா சமஸ்தான மடத்தின் ஜகத்குரு சந்திரசேகர சுவாமிகள் கருத்து தெரிவித்தார்இது குறித்து, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறியதாவது:மேடை மற்றும் சூழ்நிலையை உணர்ந்து, சுவாமிகள் பேசுவது நல்லது. அவர் கூறியது தவறு என, நான் கூறவில்லை. சுவாமிகளுக்கு தோன்றியதை, அவர் கூறியுள்ளார். சிவகுமாருக்கு முதல்வர் பதவி கிடைக்க வேண்டும் என்பது, சுவாமிகளின் கருத்தாகும்.முதல்வர், துணை முதல்வர் பதவி குறித்து விவாதிப்பது அர்த்தமற்றது. கட்சி மேலிடம் முதல்வர், துணை முதல்வரை மாற்றுவதானால், பார்வையாளர்களை அனுப்பி கருத்து கேட்கும். நாங்கள் டில்லியில் ஆலோசனை நடத்திய போது, யாரும் கூடுதல் துணை முதல்வர் பதவி குறித்து பேசவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

duruvasar
ஜூலை 01, 2024 09:36

கல்வி தந்தை பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திமுகவில் இணைந்தது போல் சிவகுமார் தலைமையில் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் திமுகவில் சேரலாம். ஸ்டாலின் அய்யாவும் மகிழ்ச்சி அடைவார்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை