மஹாராஜா டிராபி 2024 டி 20 போட்டி: மைசூரு வாரியர்ஸ் அணி சாம்பியன்
பெங்களூரு : கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் நடந்த 'மஹாராஜா டிராபி 2024 - டி20' கிரிக்கெட் போட்டியில், பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி, மைசூரு வாரியர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில், 'மஹாராஜா டிராபி 2024 டி20' கிரிக்கெட் போட்டி ஆக., 15 முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை நடந்தது. எந்தெந்த அணிகள்?
இதில், கல்யாணி பெங்களூரு பிளாஸ்டர்ஸ், மைசூரு வாரியர்ஸ், ஹூப்பள்ளி டைகர்ஸ், குல்பர்கா மிஸ்டிக்ஸ், ஷிவமொகா லயன்ஸ், மங்களூரு டிராகன்ஸ் ஆகிய அணிகள் மோதின. செப்., 1ம் தேதி நடந்த கல்யாணி பெங்களூரு பிளாஸ்டர்சுக்கும், மைசூரு வாரியர்சுக்கும் இறுதிப் போட்டி நடைபெற்றது.முதலில் டாஸ் வென்ற மைசூரு வாரியர்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான சி.ஏ.கார்த்திக், ஆறு பந்துகளில் மூன்று ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.மற்றொரு ஆட்டக்காரரான எஸ்.யு.கார்த்திக், 44 பந்துகளுக்கு மூன்று சிக்ஸ், ஏழு பவுன்டரி அடித்து 71 ரன்கள் எடுத்தார். அவருக்கு ஜோடியாக களம் இறங்கிய அணியின் கேப்டன் கருண் நாயர், 45 பந்துகளில் மூன்று சிக்ஸ், ஆறு பவுன்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.14வது ஓவரில் எஸ்.யு.கார்த்திக், நவின் பந்தில் அவுட்டானார். மைசூரு வாரியர்ஸ் அணி, 20 ஓவர்களில், 4 விக்கெட் இழப்புக்கு, 207 ரன்கள் எடுத்தது. ரூ.15 லட்சம்
அடுத்து களமிறங்கிய கல்யாணி பெங்களூரு பிளாஸ்டர்ஸ் ஆரம்பத்திலேயே ஆட்டம் கண்டது. துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவரும், அணியின் கேப்டனுமான மாயங்க் அகர்வால், ஆறு ரன்கள் எடுத்திருந்தபோது, வித்யாதர் பாட்டீலில் பந்துக்கு போல்டானார்.அவரை தொடர்ந்து வந்த புவன் ராஜு, ஒரு ரன்னில், வித்யாதர் பாட்டீல் அவுட்டாக்கினார். அடுத்தடுத்து சந்தோஷ் சிங் (5), சுபாங்க் ஹெக்டே (5), துவக்க ஆட்டக்காரர் சேத்தனா (51), சூரஜ் அஹுஜா (8), அனிருத் ஜோஷி (18), நவீன் (17) ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்தன.முடிவில் 20 ஓவர்களுக்கு எட்டு விக்கெட்களை பறிகொடுத்து, 162 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதன் மூலம், மைசூரு வாரியர்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. வெற்றி பெற்ற அணியினருக்கு 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, அணியின் கேப்டன் கருண் நாயரிடம், மைசூரு மன்னர் குடும்பத்தின் பிரமோதா தேவி வழங்கினார்.3_DMR_0011, 3_DMR_0012மஹாராஜா டிராபி 2024 டி20 கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற மைசூரு வாரியர்ஸ் அணிக்கு 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, மன்னர் குடும்பத்தின் பிரமோதா தேவி வழங்கினர். (அடுத்த படம்) உற்சாக துள்ளலில் சாம்பியன்ஸ் பட்டம் வென்ற மைசூரு வாரியர்ஸ். இடம்: சின்னசாமி கிரிக்கெட் மைதானம், பெங்களூரு.