உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வர் கையெழுத்தை நகல் எடுத்து ரூ.45 லட்சம் மோசடி செய்தவர் கைது

முதல்வர் கையெழுத்தை நகல் எடுத்து ரூ.45 லட்சம் மோசடி செய்தவர் கைது

மாண்டியா : முதல்வர் கையெழுத்தை நகல் எடுத்து, போலி ஆவணங்கள் உருவாக்கி அரசு வேலை வாங்கி தருவதாக, மூன்று பேரிடம் 45 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.மாண்டியா டவுன் கல்லஹள்ளியில் வசிப்பவர் நேத்ராவதி. இவரது மகன் தர்ஷன். பட்டப்படிப்பு படித்தவர். அரசு வேலைக்கு செல்ல முயற்சி செய்தார். இந்நிலையில் உறவினர் ஒருவரின் மூலம் நேத்ராவதிக்கு, மாண்டியா டவுன் காந்திநகரின் வெங்கடேஷ் என்பவரின் அறிமுகம் கிடைத்தது.பெங்களூரு விதான் சவுதாவில் முதல்நிலை ஊழியராக வேலை செய்வதாக நேத்ராவதியிடம், வெங்கடேஷ் கூறினார். 'எனக்கு நிறைய உயர் அதிகாரிகளை தெரியும். உங்கள் மகனுக்கு அரசு வேலை வாங்கி தருகிறேன்' என்று கூறினார்.விதான் சவுதாவில் வேலை பார்ப்பதாக அடையாள அட்டையை காண்பித்தார். இதனால் நேத்ராவதி நம்பினார். மகன் வேலைக்காக 12 லட்சம் ரூபாய் கொடுத்தார். கடந்த மாதம் தர்ஷனுக்கு, வெங்கடேஷ் பணி நியமன ஆணையை, 'வாட்ஸாப்' பில் அனுப்பினார். அதில், 'மாண்டியா மாவட்ட பொது கல்வி துறையின் துணை இயக்குனர் பதவி' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அந்த ஆணையில் முதல்வர் சித்தராமையா, பொது கல்வி துறை அதிகாரிகள் கையெழுத்து இருந்தது. சில நாட்களில் பணி நியமன ஆணையை நேரில் வந்து தருவதாக கூறினார். ஆனால் அதன் பின் வெங்கடேஷை, தர்ஷனால் தொடர்பு கொள்ள முடியவில்லை.இதையடுத்து கடந்த 14 ம் தேதி மாண்டியா கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று, கலெக்டர் குமாரை சந்தித்து தர்ஷன் பேசினார். பணி நியமன ஆணையை காண்பித்தார். ஆனால் அது போலி என்று தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த தர்ஷன், மாண்டியா டவுன் போலீசில் வெங்கடேஷ் மீது புகார் செய்தார். அவர் மீது வழக்குப்பதிவானது. தலைமறைவாக இருந்தவரை போலீசார் தேடினர். நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.அவரிடம் இருந்து போலி நியமன கடிதங்கள், அரசு லோகோ, போலி அடையாள அட்டைகள் உட்பட பல போலி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தர்ஷன் மட்டுமின்றி மேலும் இருவரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக 31 லட்சம் ரூபாய் மோசடி செய்ததும் தெரிந்தது. முதல்வரின் கையெழுத்தை எப்படி நகல் எடுத்தார் என்று தீவிர விசாரணை நடக்கிறது. இந்த மோசடியில் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என்றும் சந்தேகம் எழுந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி