பெங்களூரு: மத்திய அமைச்சர் குமாரசாமி, முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ., பதவியையும்; மேலவை எதிர்க்கட்சித் தலைவர் கோட்டா சீனிவாச பூஜாரி, எம்.எல்.சி., பதவியையும் ராஜினாமா செய்தனர்.இம்முறை நடந்த லோக்சபா தேர்தலில், எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று எண்ணிய அரசியல் கட்சிகள், தகுந்த வேட்பாளர்கள் கிடைக்காததால், பெரும் தலைவர்களை களமிறக்கின. அனைவரும் வெற்றி
பா.ஜ., -- ம.ஜ.த., காங்கிரஸ் என மொத்தம் மூன்று எம்.எல்.ஏ.,க்கள், ஒரு எம்.எல்.சி., ஆகியோர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டனர். இவர்கள் அனைவரும் வெற்றி பெற்றனர்.அதாவது சென்னப்பட்டணா ம.ஜ.த., - எம்.எல்.ஏ., குமாரசாமி மாண்டியாவிலும்; ஷிகாவி பா.ஜ., - எம்.எல்.ஏ., பசவராஜ் பொம்மை ஹாவேரியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இவர்கள் இருவருமே முன்னாள் முதல்வர்கள். கடிதம்
மேலும், சண்டூர் காங்., - எம்.எல்.ஏ., துக்காராம், பல்லாரியிலும்; பா.ஜ., - எம்.எல்.சி., கோட்டா சீனிவாச பூஜாரி, உடுப்பி - சிக்கமகளூரிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இவர் சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவர் ஆவார்.இந்நிலையில், துக்காராம் நேற்று முன்தினம் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். குமாரசாமி, பசவராஜ் பொம்மை ஆகியோர், சட்டசபை சபாநாயகர் காதரிடம் நேற்று ராஜினாமா கடிதம் அளித்தனர். இதே வேளையில், மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் பதவி கிடைத்ததற்கு, குமாரசாமிக்கு, சபாநாயகர் வாழ்த்துத் தெரிவித்தார்.மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டியிடம், கோட்டா சீனிவாச பூஜாரி, எம்.எல்.சி., பதவி ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதன் மூலம், அவர், தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் இழந்தார்.அனைவரது ராஜினாமா கடிதங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.ஷிகாவி மக்கள், என்னை தொடர்ந்து நான்கு முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்தனர். இதனால் தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் செய்ய முடிந்தது. அவர்களுக்கு என் நன்றி. எம்.பி.,யாகவும் தொடர்ந்து வளர்ச்சிப் பணிகளை செய்வேன்.- பசவராஜ் பொம்மை, எம்.பி., - பா.ஜ.,எம்.எல்.ஏ.,வாக இருந்த நான், லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டதால், ஏதாவது ஒரு பதவியை மட்டுமே வைத்திருக்க வேண்டும். எனவே எம்.எல்.ஏ., பதவியிலிருந்து ராஜினாமா செய்தேன். சென்னப்பட்டணா இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து பின்னர் பார்க்கலாம்.- குமாரசாமி, மத்திய அமைச்சர்,கனரக தொழில் துறை