குடகு, கர்நாடகாவில், எஸ்.எஸ்.எல்.சி., மாணவி தலையை துண்டித்து கொலை செய்த தாய் மாமாவும் தற்கொலை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.கர்நாடக மாநிலம், குடகு மாவட்டம், சோமவாரபேட்டின், சூர்லப்பி கிராமத்தை சேர்ந்தவர் மீனா, 16. இதே கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., படித்தார்.மகிழ்ச்சிநேற்று முன்தினம் தேர்வு முடிவு வெளியானது. இவர் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்ததால், குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்தனர்.இதற்கிடையில் மீனாவுக்கும், ஹம்மியாளா கிராமத்தை சேர்ந்த ஓம்காரப்பா, 34, என்பவருக்கும் திருமணம் செய்ய, இரண்டு குடும்பத்தினரும் முடிவு செய்திருந்தனர். இவர் மீனாவுக்கு தாய் மாமா என, கூறப்படுகிறது. நேற்று முன்தினம் நிச்சயம் செய்ய ஏற்பாடுகள் நடந்தன.ஆனால், சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பது, மகளிர், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்தது. இவர்கள் போலீசாருடன், சூர்லப்பி கிராமத்துக்கு வந்தனர். மீனாவின் பெற்றோரை சந்தித்து, '18 வயது நிரம்பிய பின்னரே திருமணம் செய்ய வேண்டும்' என, அறிவுறுத்தினர். எனவே நிச்சயதார்த்த நிகழ்ச்சியை, மீனாவின் வீட்டினர் நிறுத்தினர்.திருமணத்தை நிறுத்தியதால், ஓம்காரப்பா கோபமடைந்தார். நேற்று முன்தினம் இரவு மீனாவின் வீட்டுக்கு சென்று தகராறு செய்தார்.பெற்றோரை தாக்கிவிட்டு மீனாவை வீட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதிக்கு இழுத்து சென்றார். அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். பின், தலையை மட்டும் வெட்டி எடுத்தவர், தப்பி ஓடிவிட்டார்.விருப்பமில்லைதகவலறிந்து கிராமத்துக்கு சென்ற சோமவாரபேட் போலீசார், மீனா உடலை கைப்பற்றினர். தலையுடன் ஓடிய ஓம்காரப்பாவை வனப்பகுதியில் தேடினர். இந்நிலையில் தன் வீட்டு அருகில், ஓம்காரப்பா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது, நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டது.கொலையாளி ஓம்காரப்பா, கிராமத்தினருடன் நல்ல முறையில் நடந்து கொண்டதில்லை. முரட்டுத்தனமாக நடந்து கொள்வார். ஆனால், மீனாவிடம் மிகவும் பரிவுடன் நடந்து கொண்டார். அவர் பள்ளிக்கு செல்லும் போதும், உடன் செல்வாராம். அப்படி செல்லக் கூடாது என, பலர் கூறியும் கேட்கவில்லை.'ஒரு வாரத்துக்கு முன், மீனா தன் சகோதரி வீட்டுக்கு சென்ற போது, ஓம்காரப்பாவை திருமணம் செய்து கொள்ள தனக்கு விருப்பம் இல்லை என, கூறியுள்ளார். பெற்றோர் பலவந்தமாக சம்மதிக்க வைத்துள்ளனர்.இதையறிந்து, ஓம்காரப்பா கோபத்தில் இருந்துள்ளார். திருமணம் நின்றதால், அதற்கு மீனாவே காரணம் என கருதி, அவரை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்' என, போலீசார் தெரிவித்தனர்.