கார் மீது பஸ் மோதல் தாய் - மகன் கருகி பலி
சிக்கபல்லாபூர் : ஆந்திராவை சேர்ந்தவர் தனஞ்செய ரெட்டி. 34. இவர், தன் குடும்பத்தினர் ஐந்து பேருடன் காரில், நேற்று சிக்கபல்லாபூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். சிந்தாமணி தாலுகா, கோபள்ளி கேட் அருகே கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. எதிரில் வந்த தனியார் பஸ், எதிர்பாராத விதமாக காரின் மீது மோதியது.நேருக்கு நேர் மோதியதில், கார் தீப்பிடித்து எரிய துவங்கியது. பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது. காரில் இருந்து ஐந்து பேரும் இறங்க முயற்சி செய்தனர். இதில், குழந்தை மன்விதா, 3, உடன் ஷோபா, உமாதேவி ஆகியோர் தீப்பற்றி எரிந்த காரில் இருந்து இறங்கினர். ஆனால், தனஞ்செய ரெட்டி, அவரது தாயார் கலாவதி, 54, ஆகியோர் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தனர்.தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர். பஸ்சில் இருந்தவர்களில் சிலர் காயம் அடைந்தனர். விபத்தில் சிக்கியவர்கள், சிந்தாமணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். எஸ்.பி., குஷால் சவுக்கி சென்று ஆய்வு செய்தார். கெஞ்சர்ஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.