| ADDED : ஜூன் 15, 2024 01:08 AM
குவஹாத்தி, அண்டை மாநிலத்தில் இருந்து அசாமுக்கு கடத்தி வரப்பட்ட 6 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரையை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டனர்.வடகிழக்கு மாநிலமான அசாமின் கச்சார் மாவட்டத்துக்கு, அண்டை மாநிலத்தில் இருந்து வாகனம் ஒன்றில் போதை மாத்திரைகள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட தலைநகர் சில்கார் அருகே சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு வாகனங்கள் கண்காணிக்கப்பட்டன. அப்போது வந்த ஒரு வாகனத்தை சோதனையிட்டபோது, அதில் ரகசிய அறை அமைத்து 21,000 'யாபா' மாத்திரைகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இந்த மாத்திரையில், 'மெத்தம்பேட்டமைன் மற்றும் கபீன்' ஆகிய போதைப்பொருட்கள் அடங்கியுள்ளன. 6 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த போதை மாத்திரைகள் கடத்தியது தொடர்பாக, மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துஉள்ளார்.இந்த மாத்திரை மிசோரமில் இருந்து கடத்தி வரப்பட்டதாக தெரிகிறது.முன்னதாக கடந்த 12ம் தேதி கரீம்கஞ்ச் மாவட்டத்தில் இருந்து, 66 கோடி ரூபாய் மதிப்புள்ள 2,20,000 யாபா மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதே நாளில் கர்பி அங்லாங் மாவட்டத்திலும் 36,000 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.