நொய்டா:புதுடில்லி அருகே உ.பி.,யின் நொய்டா மற்றும் ஹரியானா மாநிலம் குருகிராம் ஆகிய நகரங்களில் உள்ள வணிக வளாகங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இ-மெயில் வாயிலாக மிரட்டல் வந்தது. ஆனால், போலீசார் நடத்திய தீவிர சோதனைக்குப் பின், புரளி என்பதை உறுதி செய்தனர்.நொய்டா 18வது செக்டாரில் உள்ள 'டி.எல்.எப்., மால் ஆப் இந்தியா' மற்றும் குருகிராம் டி.எல்.எப்., பகுதியில் உள்ள 'ஆம்பியன்ஸ் மால்' ஆகிய இரு வணிக வளாங்களிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக் நேற்று காலை இ-மெயில் வந்தது.இதையடுத்து, இரு வளாகங்களிளும் இருந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் வணிக வளாகம் முழுதும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். வெடிபொருள் எதுவும் கிடைக்கவில்லை.அதேநேரத்தில், கவுதம் புத்தா நகர் மாவட்ட கூடுதல் கமிஷனர் சிவ்ஹ்ரி மீனா, “வளாகம் முழுதும் சோதனை நடத்தப்பட்டு விட்டது. இ-மெயிலில் வந்த தகவல் புரளி. பண்டிகை காலத்தை முன்னிட்டு, கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் உள்ள மால்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தப்படுகிறது,”என்றார். குருகிராம்
அண்டை மாநிலமான ஹரியானாவின் குருகிராம் டி.எல்.எப்., பகுதியில் உள்ள 'ஆம்பியன்ஸ் மால்' அலுவலகத்துக்கு நேற்று காலை 9:27 மணிக்கு வந்த இ-மெயிலில் வளாகத்துக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.தகவல் அறிந்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் சகிதமான வந்தனர். வளாகத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு, தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனால், வெடிபொருட்கள் எதுவும் சிக்கவில்லை. டி.எல்.எப்., உதவி கமிஷனர் விகாஸ் கவுசிக், “மால் முழுதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. வெடிபொருள் சிக்கவில்லை. மக்கள் இதுபோன்ற புரளியால் பீதி அடைய வேண்டாம்,”என்றார்.கடந்த மே 1ம் தேதி நொய்டா, காஜியாபாத், குருகிராம் மற்றும் பரிதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இ-மெயில் வந்தது. சோதனையில் அது புரளி என் தெரிய வந்தது.