ஹூப்பள்ளி: ஓட்டு போட்டு வரும் வாக்காளர்களுக்கு, தள்ளுபடி விலையில் பீர் வழங்குவதாக, ஹூப்பள்ளியில் பார் உரிமையாளர் அறிவித்துள்ளார்.ஒவ்வொரு முறை தேர்தல் நடக்கும் போதும், ஓட்டு பதிவு சதவீதத்தை அதிகரிக்க அரசு, தேர்தல் ஆணையம் மட்டுமின்றி, தொண்டு அமைப்புகள், ஹோட்டல்கள் உட்பட பலரும் முயற்சிக்கின்றனர். ஏப்ரல் 26ல் முதற்கட்ட ஓட்டு பதிவு நடந்த போது, மைசூரு, பெங்களூரு, மங்களூரு என, பல்வேறு நகரங்களில் ஹோட்டல்களில் இலவச உணவு, சிற்றுண்டி, காபி, டீ கொடுத்தனர்.பெங்களூரின், நிருபதுங்கா சாலையில் உள்ள, நிசர்கா கிராண்ட் ஹோட்டலில், ஓட்டு போட்டு வந்து கை விரலில் அடையாள மை காண்பித்தவர்களுக்கு, வெண்ணெய் தோசை, லட்டு, ஜூஸ் இலவசமாக வழங்கப்பட்டது.மாநிலத்தின் 14 லோக்சபா தொகுதிகளுக்கு, இன்று இரண்டாம் கட்டமாக ஓட்டு பதிவு நடக்கவுள்ளது. ஓட்டு சதவீதத்தை அதிகரிப்பதில், ஹோட்டல்கள், பார்கள் முன் வந்து உள்ளன. ஹூப்பள்ளியின் குஸ்கல் சாலையில் உள்ள, கர்நாடக ஒயின்ஸ் பாரில், ஓட்டு போட்டு வந்தவர்களுக்கு, சலுகை விலையில் பீர் வழங்குவதாக அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார். பொதுவாக ஓட்டுப்பதிவு நடக்கும் நாளன்று, பார்கள், மதுபான கடைகள் மூடியிருக்கும். எனவே, இன்று சலுகை விலையில் மதுபானம் கிடைக்காது. ஓட்டு பதிவு முடிந்த மறுநாள், பாருக்கு வந்து அடையாள மையை காண்பித்து தள்ளுபடி விலையில், பீர் பெறும்படி உரிமையாளர் அறிவித்து உள்ளார்.