புதுடில்லி லோக்சபா தேர்தலில், வயநாடு, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்., முன்னாள் தலைவர் ராகுல், வயநாடு தொகுதியின் எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். அத்தொகுதியில், தன் தங்கை பிரியங்கா போட்டியிடுவதாகவும் அவர் கூறினார்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், கேரளாவின் வயநாடு தொகுதியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக, காங்., முன்னாள் தலைவர் ராகுல் போட்டியிட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vuxy2tgv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தன் தாய் சோனியா ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டு விட்டதால், அவர் நீண்ட காலமாக எம்.பி.,யாக இருந்த, காங்., கோட்டையாகக் கருதப்படும் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் ராகுல் போட்டியிட்டார். இந்த இரு தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றார். குழப்பம்
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, ஒருவர் இரு தொகுதிகளில் போட்டியிடலாம்; ஆனால், இரண்டிலும் வெற்றி பெற்றால் ஏதாவது ஒரு தொகுதியை, தேர்தல் முடிவுகள் வெளியான, 14 நாட்களுக்குள் ராஜினாமா செய்ய வேண்டும். அதன்படி, வயநாடு, ரேபரேலி ஆகிய இரண்டில், ஏதாவது ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ராகுலுக்கு ஏற்பட்டது. ரேபரேலி, வயநாடு ஆகிய தொகுதிகளுக்கு கடந்த வாரம் சென்ற ராகுல், தனக்கு ஓட்டளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். வயநாட்டில் தொகுதி மக்களை சந்தித்து பேசிய அவர், தான் எந்த முடிவு எடுத்தாலும், அது வயநாடு, ரேபரேலி தொகுதி மக்களுக்கு மகிழ்ச்சியானதாகவே இருக்கும் என்றும், இந்த இரு தொகுதிகளில், எந்த தொகுதியை விட்டுக் கொடுப்பது என்பது ஒரே குழப்பமாக இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார். அன்றைய தினம் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கேரள காங்., தலைவர் கே.சுதாகரன், 'வயநாடு எம்.பி.,யாக ராகுல் நீடிப்பார் என, நாம் எதிர்பார்க்க முடியாது' என, அப்போதே சூசகமாக தெரிவித்தார்.இந்நிலையில், எந்த தொகுதியை விட்டுக் கொடுப்பது என்பது குறித்து, டில்லியில், காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடன், ராகுல் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், அவரது தாய் சோனியா, தங்கை பிரியங்கா, கட்சி பொதுச்செயலர் வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்துக்கு பின், செய்தியாளர்களிடம் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், ''ரேபரேலி தொகுதி எம்.பி.,யாக ராகுல் தொடர்வார். பல கட்ட ஆலோசனைக்குப் பின், வயநாடு தொகுதியில் பிரியங்காவை களமிறக்க முடிவு செய்துள்ளோம். அவரும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்,'' என்றார்.தொடர்ந்து, ராகுல் கூறுகையில், ''வயநாடு தொகுதிக்கும், எனக்கும் இடையிலான உறவு உணர்வுப்பூர்வமானது. வயநாடு மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். வயநாடு தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவார். அவர் நிச்சயம் வெற்றி பெறுவார்.''பார்லி.,யில் தங்களுக்கு இரு உறுப்பினர்கள் உள்ளதாக வயநாடு மக்கள் நினைக்க வேண்டும். ஒன்று நான்; மற்றொருவர் பிரியங்கா. கடந்த ஐந்து ஆண்டுகளாக வயநாடு மக்கள் கொடுத்த ஆதரவு, அன்பை மறக்க மாட்டேன்,'' என்றார்.செய்தியாளர்களிடம் பிரியங்கா கூறுகையில், ''வயநாடு தொகுதியில் போட்டியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அத்தொகுதியில் கடினமாக உழைத்து மக்கள் பணியாற்றுவேன். ராகுல் இல்லாததை வயநாடு தொகுதி மக்கள் உணர விட மாட்டேன். ''ரேபரேலி, வயநாடு தொகுதிகளுக்கு, நானும், ராகுலும் பிரதிநிதிகளாக நிற்போம். ரேபரேலி தொகுதியில் அவருக்கு நான் உதவுவேன்,'' என்றார். சம்மதம்
அரசியலுக்குள் நுழைவதில் மிகுந்த தயக்கம் காட்டி வந்த பிரியங்கா, நீண்ட ஆலோசனைக்கு பின், காங்கிரஸ் பொதுச் செயலர் பொறுப்பை ஏற்றார். உத்தர பிரதேசத்தில் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் பிரசாரம் செய்வதில் மட்டும் அவர் ஆர்வம் காட்டி வந்தார். தேர்தலில் போட்டியிடுவதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில், வயநாடு தொகுதியில் ராகுல் ராஜினாமா செய்வதால், கேரள மக்களின் கோபம் காங்கிரஸ் மீது திரும்பும் என்றும், அது, அடுத்தடுத்த தேர்தல்களில் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், கேரள காங்., நிர்வாகிகள், பிரியங்கா மற்றும் ராகுலிடம் தெரிவித்தனர்.இதையடுத்துத் தான், தேர்தல் களத்தில் குதிக்க பிரியங்கா சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.