உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பி.டி.ஏ., வர்த்தக கட்டடங்கள் புதுப்பிப்பு முதல் கட்டமாக 2 இடங்களில் துவக்கம்

பி.டி.ஏ., வர்த்தக கட்டடங்கள் புதுப்பிப்பு முதல் கட்டமாக 2 இடங்களில் துவக்கம்

பெங்களூரு: பெங்களூரின், ஏழு காம்ப்ளக்ஸ்களை ஹைடெக்காக மாற்ற, பி.டி.ஏ., எனும் பெங்களூரு நகர மேம்பாட்டு ஆணையம் திட்டம் வகுத்துள்ளது. முதற்கட்டமாக இரண்டு இடங்களில், பணிகள் துவங்கப்பட்டன.பி.டி.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:பெங்களூரில் பல்வேறு இடங்களில் பி.டி.ஏ.,வின் வர்த்தக கட்டடங்கள் உள்ளன. இவற்றில் பிரபலமான ஏழு வர்த்தக கட்டடங்கள் சிதிலம் அடைந்துள்ளன. இவற்றை நவீனப்படுத்த பி.டி.ஏ., திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக விஜயநகர், சதாசிவநகரில் உள்ள கட்டடங்களை நவீனமாக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

முரண்டு

விஜயநகர், சதாசிவ நகரில் பி.டி.ஏ., வர்த்தக கட்டடங்களை நவீனமாக்கும் பொறுப்பை, எம்.எப்.ஏ.ஆர்., நிறுவனம் ஏற்றுள்ளது. பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டன. இந்திரா நகர், ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட், ஆர்.டி.நகர், கோரமங்களாவில் உள்ள வர்த்தக கட்டடங்களை இடித்து விட்டு, புதிதாக கட்ட திட்டமிட்டுள்ளோம். இங்குள்ள வியாபாரிகள் காலி செய்யாமல், முரண்டு பிடிக்கின்றனர்.கடைக்காரர்களுடனான ஒப்பந்த காலம் முடிந்து விட்டது. கட்டடமும் சிதிலம் அடைந்துள்ளது. ஆனால் கடைகளை காலி செய்யாததால், பணிகளை துவக்குவது தாமதமாகிறது. சில வியாபாரிகள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்திரா நகரின் வர்த்தக கட்டடம், ஆறு ஏக்கர் பரப்பளவில் விசாலமாக உள்ளது. இதை இடித்து விட்டு புதிதாக கட்ட, 'எம்பெசி' நிறுவனத்துக்கு டெண்டர் அளிக்கப்பட்டுள்ளது. மற்ற ஆறு நிறுவனங்களை நவீனமாக்கும் பொறுப்பை, எம்.எப்.ஏ.ஆர்., நிறுவனம் ஏற்றுள்ளது.எம்.எப்.ஏ.ஆர்., நிறுவனம் பணிகளை முடித்த பின், 70 சதவீதம் இடத்தை பயன்படுத்தி கொள்ளும். பி.டி.ஏ.,வுக்கு 30 சதவீதம் இடம் கிடைக்கும். வர்த்தக கட்டடத்தை கட்டி, நிர்வகிப்பது, நிறுவனத்தின் பொறுப்பாகும். 30 ஆண்டுகள் ஒப்பந்தத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் வர்த்தக கட்டடத்தை பி.டி.ஏ., வசப்படுத்தும்.

ரூ.5,000 கோடி

கோரமங்களா, இந்திரா நகர், ஆஸ்டின் டவுன், தொம்மலுார், நாகரபாவி, ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட், ஆர்.எம்.வி., மினி மார்க்கெட், ஆர்.டி.நகர், ஹெச்.பி.ஆர்., லே - அவுட்;பனசங்கரி இரண்டாவது ஸ்டேஜ், வலகேரஹள்ளி, வலகேரஹள்ளி சமுதாய பவன், தொட்டபனஹள்ளி, ஹலகெவடேரஹள்ளியில் பி.டி.ஏ.,வுக்கு சொந்தமான வர்த்தக கட்டடங்கள் உள்ளன. இவற்றின் மதிப்பு 5,000 கோடி ரூபாயாகும்.கடந்த 2021 - 22ம் ஆண்டுடன் ஒப்பிட்டால், 2022 - 23ல் வர்த்தக கட்டடங்களில் இருந்து கிடைக்கும் வருவாய் அதிகரித்துள்ளது. 5.53 கோடி ரூபாயில் இருந்து, 10.17 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மற்ற கட்டடங்களை விட, ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட் வர்த்தக கட்டடத்தில் இருந்து, அதிக வருவாய் கிடைக்கிறது.வர்த்தக கட்டடங்கள் மிகவும் பழையதாகும். மழை பெய்தால் ஒழுகுகிறது. எனவே 993 கடைகளில் 346 கடைகள் மட்டும் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. மற்ற கடைகளை காலியாக விட்டுள்ளோம். வர்த்தக கட்டடங்களில் ஷாப்பிங் கடைகள் மட்டுமின்றி, அங்கு திரையரங்கு உட்பட, பொழுது போக்கு விஷயங்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !