| ADDED : ஜூலை 19, 2024 05:16 PM
பெங்களூரு:''மழை பாதிப்பு பகுதிகளில் நிவாரண பணிகள் மேற்கொள்வதற்காக, 777.50 கோடி ரூபாய் நிதி கலெக்டர்களின் வங்கி கணக்கிற்கு விடுவிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் நிதி தரப்படும்,'' என, வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ணபைரேகவுடா சட்டசபையில் தெரிவித்தார்.'மழை நிவாரண பணிகளுக்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்' என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர், சட்டசபையில் அரசுக்கு கேள்வி எழுப்பினர். இதற்கு, பதில் அளித்து வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ணபைரேகவுடா பேசியதாவது:மிக கனமழை பெய்யும் பகுதிகளில், 29 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. வெள்ளம் சூழ்ந்துள்ள தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் இருந்த மக்கள் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அனைவருக்கும், உணவு, மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளது. மழை பாதிப்பு பகுதிகளில் நிவாரண பணிகள் மேற்கொள்வதற்காக, 777.50 கோடி ரூபாய் நிதி கலெக்டர்களின் வங்கி கணக்கிற்கு விடுவிக்கப்பட்டுள்ளது.தேவைப்பட்டால் கூடுதல் நிதி தரப்படும்; நிதி தட்டுப்பாடு இல்லை. வரும் நாட்களில் மிக கன மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.இதனால், முன்னெச்சரிக்கையாக, ஆறு தேசிய இயற்கை பேரிடர் மீட்பு குழுக்கள், பெலகாவி, கடலோர பகுதிகள், மலைப் பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நிவாரண பணிகள் மேற்கொள்வதற்காக கிராம அளவில் இருந்து, மாவட்ட அளவில் வரை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மாநில இயற்கை பேரிடர் நிவாரண விதிமுறைப்படி, நிவாரண நிதி வழங்கப்படும். இது குறித்து, வரும் 22ம் தேதி நடக்க உள்ள கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக அரசு செயல்படும். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.***