காதலிக்க இளம்பெண் மறுப்பு பைக், கார்களுக்கு தீ வைத்த ரவுடி
சி.கே.அச்சுக்கட்டு: காதலை இளம்பெண் கைவிட்டதால், அவரது பைக், குடும்பத்தினரின் இரண்டு கார்களுக்கு தீ வைத்த ரவுடி, அவரது கூட்டாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.பெங்களூரு ஹனுமந்தநகரை சேர்ந்தவர் ராகுல், 25. இவரும், சி.கே.அச்சுக்கட்டின் 23 வயது இளம்பெண்ணும் கடந்த 9 ஆண்டுகளாக காதலித்தனர். இந்நிலையில் ராகுலின் நடவடிக்கை பிடிக்காததால், அவரிடம் இருந்து இளம்பெண் விலக ஆரம்பித்தார். கடந்த மாதம் ராகுலை சந்தித்த காதலி, நாம் இருவரும் 'பிரேக் அப்' செய்து கொள்ளலாம் என்று கூறிவிட்டு சென்றார்.ஆனாலும் இளம்பெண்ணை தினமும் பின்தொடர்ந்து சென்ற ராகுல், மீண்டும் காதலிக்கும்படி கூறினார். இதற்கு இளம்பெண் ஒப்புக்கொள்ளவில்லை. ஆத்திரம் அடைந்த ராகுல், தனது கூட்டாளிகள் இருவருடன், நேற்று முன்தினம் நள்ளிரவில் இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்றார். வீட்டின் முன்பு நின்ற இளம்பெண்ணின் ஸ்கூட்டருக்கு தீ வைத்தார்.அங்கு இருந்து புறப்பட்ட ராகுலும், கூட்டாளிகளும் நேராக சுப்பிரமணியபுரா சென்றனர். இளம்பெண்ணின் குடும்பத்தினர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைய முயன்றனர்.அவர்களை தடுத்த காவலாளியை தாக்கிவிட்டு உள்ளே சென்றனர். நேராக பார்க்கிங் சென்று, இளம்பெண் குடும்பத்தினரின் இரண்டு கார்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி சென்றனர்.தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு வந்து கார்களில் பிடித்த தீயை அணைத்தனர். ஆனாலும் கார்களும், ஸ்கூட்டரும் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது.இந்த சம்பவங்கள் குறித்து சி.கே.அச்சுக்கட்டு, சுப்பிரமணியபுரா போலீசார் தனித்தனி வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். தலைமறைவாக உள்ள ராகுல், கூட்டாளிகளை தேடுகின்றனர். ராகுலின் பெயர் ஹனுமந்தநகர் போலீஸ் நிலையத்தின் ரவுடி பட்டியலில் உள்ளது. கொலை, கொலை முயற்சி, கொள்ளை, மிரட்டி பணம் பறிப்பு, போதை பொருள் கடத்தல் என அவர் மீது 18 வழக்குகள் உள்ளன.'என்னை யாராலும் பிடிக்க முடியாது. தைரியம் இருந்தால் என்னை கைது செய்து பாருங்கள்' என்று, சமூக வலைதளங்களில், ராகுல் சவால் விடும் வகையில் வீடியோ பேசி இருந்தார். அவரை ஹனுமந்தநகர் போலீசார் கைது செய்தனர். போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதால், அவரை துப்பாக்கியால் சுட்டும் பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.