ஷிவமொகா : முன்னாள் முதல்வரும், தன் தந்தையுமான பங்காரப்பா படித்த அரசு பள்ளிக்கு, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை தானமாக வழங்கினார்.ஷிவமொகா மாவட்டம், சொரபாவை சேர்ந்தவர் முன்னாள் முதல்வர் பங்காரப்பா. இவர், சொரபாவின் குபடூர் அரசு உயர்நடுநிலைப் பள்ளியில், ஆரம்ப கல்வியை கற்றார்.அவரது மகன் மது பங்காரப்பா, தற்போது, பள்ளிக்கல்வி துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். தன் தந்தையின் நினைவாக, அந்த பள்ளிக்கு நேற்று சென்ற அவர், தனிப்பட்ட முறையில், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை தானமாக வழங்கினார்.இதன் மூலம், 'என் பள்ளி, என் பொறுப்பு' என்ற திட்டத்தை, அமைச்சர் துவக்கி வைத்தார். இந்த நிதியில், கணிணி, யு.பி.எஸ்., ஸ்மார்ட் வகுப்பறைக்கான உபகரணங்கள், நுாலகங்களுக்கான புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றை தந்துள்ளார்,நிகழ்ச்சியில், மது பங்காரப்பா பேசியதாவது:அரசு பள்ளியில் படித்து உயர் பதவிகளில் இருப்பவர்கள், அவர்கள் படித்த பள்ளியை மேம்படுத்துவதற்காக 'என் பள்ளி, என் பொறுப்பு' என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் படித்தவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பல்வேறு உயர் பதவிகள் இருக்கின்றனர். பெரிய தொழிலதிபர்களாகவும் இருக்கின்றனர். அத்தகையோர், தாங்கள் படித்த பள்ளிகளை மேம்படுத்துவதற்கு கை கோர்க்க வேண்டும்.ஆர்வம் உள்ள மற்றவர்களுக்கு பள்ளியை மேம்படுத்த அணில் போன்று இயன்ற சேவையை செய்யலாம். அரசு பள்ளிகள், நம் சமூகத்தின் சொத்து. அரசு பள்ளிகள் மீது மக்களுக்கு நன்மதிப்பை ஏற்படுத்துவதற்காகவே, 'என் பள்ளி, என் பொறுப்பு' என்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.விருப்பம் உள்ளவர்கள், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தினரை சந்தித்து உதவலாம். மாண்டியா, ஹாவேரியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு, முன்னாள் மாணவர்கள், 6 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி முன் உதாரணமாக திகழ்ந்துள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.