பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் இலக்கை எட்ட முடியாததால், கவலையில் இருந்த துணை முதல்வர் சிவகுமாருக்கு, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் ஆறுதல் தெரிவித்தனர்.லோக்சபா தேர்தலில் மாநிலத்தில், 20 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து காங்கிரஸ் போட்டியிட்டது. இதற்காக, தேசிய தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல், பிரியங்கா போன்ற தேசிய தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்தனர்.முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உட்பட அமைச்சர்கள் என மாநில தலைவர்களும் திட்டமிட்டு சுற்று பயணம் செய்தனர். வாக்குறுதி திட்டங்களை சொல்லி பிரசாரம் செய்தனர். தலைவர்கள் சென்ற இடமெல்லாம் கூட்டமும் சேர்ந்தது.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு 1 லட்சம் ரூபாய் தரப்படும் என்று வாக்குறுதி அளித்து, அதற்கான வாக்குறுதி அட்டையும், வாக்காளர்களுக்கு வினியோகிக்கப்பட்டன. இவை எதுவுமே எடுபடவில்லை.இதனால், காங்கிரசால் இலக்கை எட்ட முடியாமல், 9 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால், மாநில காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான சிவகுமார் கவலை அடைந்து வீட்டிலேயே இருந்தார்.இந்நிலையில், பெங்களூரு சதாசிவ நகரில் உள்ள அவரது வீட்டுக்கு, அமைச்சர்கள் முனியப்பா, செலுவராயசாமி, டி.சுதாகர், ராஜ்யசபா எம்.பி., சந்திரசேகர், எம்.எல்.ஏ.,க்கள் நரேந்திர சுவாமி, உதய் உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் படையெடுத்தனர். சிவகுமாரை சந்தித்து ஆறுதல் கூறினர்.அப்போது, பெங்களூரு ரூரலில் சுரேஷ் படுதோல்வி குறித்து ஆலோசனை நடத்தினர். 'தோல்வியை கண்டு துவண்டு கிடந்தால், அரசியலில் வளர விட மாட்டார்கள். எனவே மீண்டும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு, அடுத்தடுத்து வரும் உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றி பெறுவதில் கவனம் செலுத்துவோம்' என்று பேசி உள்ளதாக தெரிய வந்துள்ளது.மேலும், தோல்விக்கான காரணத்தை கண்டுபிடித்து, அதை சரி செய்வது குறித்து, விரைவில் ஆலோசனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.