ரூ.175 கோடி பண மோசடி எஸ்.பி.ஐ., மேலாளர் கைது
ஹைதராபாத்: தெலுங்கானாவின் ஹைதராபாதில் உள்ள ஷம்ஷீர் கஞ்ச் எஸ்.பி.ஐ., வங்கிக் கிளையில் உள்ள குறிப்பிட்ட ஆறு சேமிப்பு கணக்கு குறித்து, என்.சி.ஆர்.பி., எனப்படும், 'சைபர்' குற்றங்கள் பற்றி புகார் அளிக்கும் இணையதளத்தில் 600க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்தன.இதையடுத்து, சைபர் குற்றவியல் போலீசார் அந்த கணக்குகளை தீவிரமாக கண்காணிக்க துவங்கினர். 2024, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அந்த கணக்கில் இருந்து பல நுாறு கோடி ரூபாய்க்கு பணப்பரிமாற்றங்கள் நடந்தது தெரியவந்தது. தோண்டி துருவி விசாரித்ததில், இந்த ஆறு வங்கி கணக்குகளுமே, 'மியூல் அக்கவுன்ட்'கள் என தெரியவந்தது. அதாவது, சட்டவிரோத செயல்களில் கிடைக்கும் பணத்தை பரிமாற்ற பயன்படுத்தப்படும் கணக்குகள்.இந்த மோசடியின் மூளையாக செயல்பட்ட குற்றவாளி, துபாயில் இருந்து இந்த முறைகேடை அரங்கேற்றி உள்ளார். துபாயில் இருந்து அரங்கேற்றப்படும் சில சைபர் குற்றங்கள் வாயிலாக கிடைக்கும் பணத்தை, ஹைதராபாதில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கி கிளையில் வரவு வைத்து, அங்கிருந்து அந்த பணம் வினியோகிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, 175 கோடி ரூபாய் வரை பண மோசடி நடந்துள்ளது.சில ஏழை அப்பாவிகளை பிடித்து அவர்கள் பெயரில் வங்கிக் கணக்குகள் துவங்கி, அதில் இருந்து இந்த பணப்பரிமாற்ற மோசடிகள் நடந்துள்ளன. அந்த வங்கிக் கணக்குகளை துவங்கிய ஏழைகளுக்கு கமிஷன் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆசைப்பட்டு அவர்களும் மோசடிக்கு துணை போயுள்ளனர்.வங்கிக் கணக்கு துவங்க காரணமாக இருந்த முகமது ஷோயப் தாக்கிர், மஹ்மூத் பின் அஹ்மத் பவாசிர் ஆகியோரை போலீசார் கடந்த 24ல் கைது செய்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், எஸ்.பி.ஐ., வங்கி மேலாளர் மது பாபு காலி, 49, அவரது கூட்டாளியும், உடற்பயிற்சியாளருமான உபாத்யா சந்தீப் சர்மா, 34, ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மோசடி வங்கிக் கணக்கு திறக்க உதவிஉள்ளனர்