உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரஜ்வல் பாஸ்போர்ட்டை முடக்க மோடிக்கு சித்தராமையா கடிதம் ஜெர்மனியில் இருந்து இந்தியா அழைத்து வரவும் கோரிக்கை

பிரஜ்வல் பாஸ்போர்ட்டை முடக்க மோடிக்கு சித்தராமையா கடிதம் ஜெர்மனியில் இருந்து இந்தியா அழைத்து வரவும் கோரிக்கை

பெங்களூரு: 'ஆபாச வீடியோ வழக்கில் சிக்கியுள்ள, எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும்' என்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதி உள்ளார். 'சர்வதேச போலீசார் உதவியுடன், ஜெர்மனியில் இருந்து பிரஜ்வலை, இந்தியா அழைத்து வர வேண்டும்' என்றும் கோரிக்கை வைத்து உள்ளார்.ஹாசன் ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். ஆபாச வீடியோ வழக்கில் சிக்கி உள்ளார். இந்த வழக்கை சிறப்பு விசாரணை குழு விசாரிக்கிறது. பிரஜ்வல் இப்போது ஜெர்மனியில் உள்ளார். வழக்கிற்கு பயந்து தப்பி சென்றதாக, காங்கிரசார் குற்றம் சாட்டுகின்றனர். 'மத்திய அரசு உதவியுடன், பிரஜ்வல் ஜெர்மன் சென்றார்' என்று, முதல்வர் சித்தராமையாவும் கூறி உள்ளார்.

ஆவணம் தயார்

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் சித்தராமையா நேற்று எழுதிய கடிதம்:தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும், ஹாசன் சிட்டிங் எம்.பி.,யுமான பிரஜ்வல் ரேவண்ணா சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோக்கள் பற்றி, நீங்கள் அறிந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நாட்டை உலுக்கிய பயங்கரமான மற்றும் வெட்கக்கேடான வழக்கை, பிரஜ்வல் ரேவண்ணா எதிர்கொண்டு உள்ளார்.எங்கள் அரசு இந்த வழக்கை விசாரிக்க, சி.ஐ.டி.,யின் கீழ் சிறப்பு விசாரணை குழு அமைத்து உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரில், பிரஜ்வல் மீது கடந்த 28ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.பிரஜ்வல் ஜெர்மனியில் இருப்பதால், விசாரணை நிலுவையில் உள்ளது. மத்திய வெளியுறவு துறை, பிரஜ்வலின் பாஸ்போர்ட்டை ரத்து செய்வதுடன், சர்வதேச போலீஸ் உதவியுடன், ஜெர்மனியில் இருந்து அவரை அழைத்து வர, நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கின் அனைத்து ஆவணங்களையும் வழங்க, சிறப்பு விசாரணை குழு தயாராக உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

விசாரணைக்கு மறுப்பு

இதற்கிடையில், 24 மணி நேரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு பிரஜ்வல், அவரது தந்தை ரேவண்ணாவுக்கு நேற்று முன்தினம், சிறப்பு விசாரணை குழு சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் ஹாசனில் இருந்தும், ரேவண்ணா ஆஜராகவில்லை. ஜெர்மனியில் இருந்து நாளை அதிகாலை பிரஜ்வல் பெங்களூரு வருவார் என்றும் தகவல் வெளியானது.அவர், தனது முகநுால் பக்கத்தில், 'பெங்களூரில் இருந்தால் விசாரணைக்கு ஆஜராகி இருப்பேன். இப்போது ஜெர்மனியில் இருப்பதால், விசாரணைக்கு ஆஜராக முடியாத நிலை. வாய்மையே வெல்லும்' என்று பதிவிட்டு இருந்தார்.இந்நிலையில், விசாரணைக்கு ஆஜராக பிரஜ்வலுக்கு ஏழு நாட்கள் அவகாசம் அளிக்கும்படி, விசாரணை அதிகாரி பிரிஜேஷ்குமார் சிங்கிற்கு, பிரஜ்வலின் வக்கீல் கடிதம் எழுதி உள்ளார்.இது ஒரு பக்கம் இருக்க, சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்கள், வீடியோக்களில் இருந்த பெண்களை கண்டறிந்துள்ள சிறப்பு விசாரணை குழுவினர், சில பெண்களிடம் விசாரணைக்கு வருமாறு, 'வாட்ஸாப்' மூலம் அழைப்பு விடுத்தனர். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்கள் விசாரணைக்கு வர மறுக்கின்றனர்.'நாங்கள் பாதிக்கப்பட்டு உள்ளோம். விசாரணைக்கு வந்தால் எங்கள் குடும்பத்தில் பிரச்னை வரும். விசாரணை என்ற பெயரில், எங்களை தொந்தரவு செய்ய வேண்டாம். விசாரணைக்கு வரும்படி அழுத்தம் கொடுத்தால், தற்கொலை செய்து கொள்வோம்' என்று, கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சிறப்பு பூஜை

பெங்களூரு ரூரல் காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் அளித்த பேட்டியில், ''எந்த பிரச்னையாக இருந்தாலும், சிவகுமாரை இழுத்து விடவில்லை என்றால், குமாரசாமியால் நிம்மதியாக துாங்க முடியாது; சாப்பிட முடியாது. ''சிவகுமார் பெயரை கூறி, விசாரணையை திசை திருப்ப குமாரசாமி முயற்சி செய்கிறார். தேவகவுடா எம்.பி.,யாக இருந்த போது, ஹாசனில் வீடு கட்டினார். அந்த வீட்டில் தான், ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் எடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது,'' என்றார்.சுரேஷ் கூறிய வீடு, தேவகவுடா ஹாசன் தொகுதி எம்.பி.,யாக இருந்தபோது கட்டப்பட்டது. பிரஜ்வல் எம்.பி., ஆனதும், அந்த வீட்டை தான் பயன்படுத்தி உள்ளார். ஹாசன் சென்றால், அந்த வீட்டில் தான் தங்குவார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அந்த வீட்டிற்கு பூட்டு போட்டுள்ளனர். சிறப்பு விசாரணை குழு, அந்த வீட்டில் சோதனை நடத்தவும் திட்டமிட்டுஉள்ளது. தேவகவுடா குடும்பத்தினர் கடவுள் பக்தி மிகுந்தவர்கள். இதனால் பிரச்னையில் இருந்து விடுபட வேண்டி, ஹொளேநரசிபுராவில் உள்ள வீட்டில், நேற்று காலை ரேவண்ணா குடும்பத்தினர் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின் அங்கிருந்து காரில் புறப்பட்ட ரேவண்ணா, பெங்களூரு வந்து வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தினார்.

திரையுலகினர் எதிர்ப்பு

பிரபல பின்னணி பாடகி சின்மயி, 'எக்ஸ்' வலைதள பதிவில், 'குடும்பம், ரத்தபந்தம் மனிதன் செய்யும் தவறுக்கு பொறுப்பு ஏற்காது. அவர் என்ன செய்கிறார் என்பதை அவர்கள் அனைவரும் அறிந்திருப்பர் என்று நான் நம்புகிறேன். குழந்தைகள் போல கவனித்து கொண்ட பாட்டிக்கு பாலியல் தொல்லையா?'பெண்களை பற்றி கவலைப்படாமல், தேர்தலுக்காக கட்சிகளுக்கிடையே வெட்கமின்மை. சம்பந்தப்பட்ட நபர் நாட்டை விட்டு வெளியேறி உள்ளார். எது எப்படி இருந்தாலும் நம் மக்கள் ஊழல்வாதிகள், மனைவிகளை அடிப்பவர்கள், பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு ஓட்டளித்து விடுகின்றனர். போங்கடா நீங்களும் உங்க மண்ணாங்கட்டி அரசியலும்' என்று பதிவிட்டு உள்ளார்.தெலுங்கு நடிகை ராஷ்மி கவுதம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'ஒரு பெண் பசியாக இருக்கும்போது, அவள் வாய்க்கு உணவளிக்க வேண்டும். உங்களுடையது அல்ல...' என்றும் பதிவிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ