கர்நாடகா வளங்களை சுரண்டியது மத்திய அரசு மீது சித்து குற்றச்சாட்டு
பெங்களூரு : 'கர்நாடக வளங்களை மத்திய பா.ஜ., அரசு சுரண்டி உள்ளது' என்று, முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டி உள்ளார்.முதல்வர் சித்தராமையா வெளியிட்ட அறிக்கை:காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடகா திவால் நிலையை நோக்கி செல்வதாகவும், பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து இருப்பதாகவும் முன்னாள் முதல்வரும், ஹாவேரி பா.ஜ., - எம்.பி.,யுமான பசவராஜ் பொம்மை, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா விமர்சித்து உள்ளனர். பா.ஜ., ஆட்சியில் இருந்த போது தான், மாநிலம் பொருளாதார வீழ்ச்சியின் விளிம்பிற்கு தள்ளப்பட்டது. இப்போது எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கும் அவர்கள், சிறந்த பொருளாதார நிபுணர்கள் போன்று பேசுகின்றனர்.அவர்களின் பொறுப்பற்ற நிதி கொள்கைகளால் ஏற்பட்ட தவறான நிர்வாகம், குழப்பத்திற்கு பிறகு, மாநிலத்தின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டி எழுப்பும் பாதையில், காங்கிரஸ் அரசு உழைத்து வருகிறது. அவர்கள், இதை ஏற்றுக்கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ முடியாமல் போனது துரதிர்ஷ்டம். பில் தொகை
பா.ஜ., ஆட்சியின் போது பொதுப்பணி, சிறிய நீர்பாசனம், நீர்பாசனத்துறை, நகர்ப்புற மேம்பாடு, கிராமப்புற மேம்பாடு, வீட்டுவசதி ஆகிய துறைகளின் பணியை செய்த கான்ட்ராக்டர்களுக்கு 2,70,695 கோடி ரூபாய் பில் தொகை செலுத்தாமல் சென்று விட்டனர்.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கர்நாடகாவின் வளங்களை சுரண்டிய போதிலும், மாநில பா.ஜ., தலைவர்கள் அமைதியாக இருந்தனர். ஆண்டிற்கு 18,000 கோடி ரூபாய் முதல் 20,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது.மோடி அரசு, கர்நாடக மாநிலத்திற்கு வரி பங்கீட்டில் அநீதி இழைத்து உள்ளது. கடந்த 2018 - 2019 ம் ஆண்டு மத்திய பட்ஜெட் 24.42 லட்சம் கோடி ரூபாயாக இருந்த போது, கர்நாடகா 35,895 கோடியை தனது பங்காக பெற்றது. மத்திய அரசு கர்நாடகாவிடம் இருந்து 4.50 லட்சம் கோடிக்கு மேல் வரி வசூலிக்கிறது. ஆனால் சிறிய பகுதியை மட்டும் திருப்பி தருகிறது.பத்ரா மேலணை திட்டத்திற்கு 5,300 கோடி ரூபாய் நிதி அறிவித்தாலும், ஒரு ரூபாய் கூட தரவில்லை. இத்தனை பிரச்னைகள் இருந்தும், அரசின் பொருளாதாரம் சரியான நிலையில் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் எங்கள் சராசரி பட்ஜெட் வளர்ச்சி 18.3 சதவீதம். முதலீடு ஈர்ப்பு
மாநிலத்தின் சொந்த, வரி வருவாய் வளர்ச்சி 15 சதவீதம்; பா.ஜ., ஆட்சியில் 11 சதவீதம் இருந்தது. அண்டை மாநிலங்களை விட, கர்நாடகா மூலதன செலவு சிறப்பாக உள்ளது. மத்திய அரசு துரோகம் செய்த போதிலும் கர்நாடகா வலுவாக உள்ளது. கல்யாண கர்நாடகாவுக்கு நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறோம். காங்கிரஸ் அரசு 7வது சம்பள கமிஷன் அறிக்கையை செயல்படுத்தி உள்ளது. சம்பளத்தை 27.5 சதவீதம் அதிகரித்து உள்ளோம். சமீபத்தில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் 10.27 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளன. இப்படி இருந்தும் மாநிலத்தின் நிதி நிலையை பா.ஜ., விமர்சிப்பது சரியல்ல.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.