காங்., அரசை கவிழ்க்க முயற்சி பா.ஜ., மீது சிவகுமார் குற்றச்சாட்டு
பெங்களூரு: ''கர்நாடக காங்கிரஸ் அரசை கவிழ்க்க, பா.ஜ,, முயற்சிக்கிறது. ஆனால் அது முடியாது,'' என துணை முதல்வர் சிவகுமார் கூறினார்.பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:பிரதமர் நரேந்திர மோடி, விரக்தியால் பேசுகிறார். தமிழகம், ஆந்திரா, கேரளாவில் பா.ஜ.,வுக்கு செல்வாக்கு இல்லை. கர்நாடகாவில் மட்டுமே அவர்களின் கட்சி ஆட்சியில் இருந்தது. ஆனால் முந்தைய தேர்தலில் பா.ஜ., தோற்றது. காங்கிரஸ் அரசு வந்தது. இப்போது எங்கள் அரசை கவிழ்க்க, பா.ஜ., முயற்சிக்கிறது. ஆனால், அது முடியாது.லோக்சபா தேர்தலில் பா.ஜ., இரட்டை இலக்கத்தை தாண்டாது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பெண்களின் மாங்கல்யம் இல்லாதபடி செய்யும் என, பிரதமர் மோடி கூறியுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், காங்., தேசிய பொது செயலர் பிரியங்கா, 'நாட்டின் நலனுக்காக, என் தாய் மாங்கல்யத்தை இழந்தார்' என கூறினார்.பா.ஜ., அரசு வருமான வரித்துறையை பயன்படுத்தி, காங்கிரசுக்கு எதிராக செயல்படுகிறது. மாநிலத்தில் காங்கிரஸ் அரசு இருக்க கூடாது என்பது, பா.ஜ., வின் எண்ணமாகும். பா.ஜ.,வினர் எங்கும் பணம் கொடுத்தது இல்லையா. நாங்கள் சொன்னபடி நடந்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.