UPDATED : ஜூன் 20, 2024 08:57 AM | ADDED : ஜூன் 20, 2024 01:11 AM
பெங்களூரு, பெங்களூரைச் சேர்ந்த பெண், 'அமேசான்' செயலி வாயிலாக, 'ஆர்டர்' செய்து பெற்ற, 'வீடியோ கேம் கன்ட்ரோலர்' கருவியின் பார்சலுக்குள் பாம்பு ஒன்று உயிருடன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.கர்நாடக மாநிலம், பெங்களூரின் சர்ஜாபூர் பகுதியில் வசிப்பவர் தான்வி. இவரும், இவரது கணவரும் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.தன் கணவருடன் இணைந்து வீடியோ கேம் விளையாட பயன்படும் 'எக்ஸ் பாக்ஸ் கன்ட்ரோலர்' எனும் 5,000 ரூபாய் மதிப்பிலான கருவியை அமேசான் தளத்தில் சில தினங்களுக்கு முன் ஆர்டர் செய்துள்ளனர்.அதற்கான பார்சல் சமீபத்தில் அவர்களிடம் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. பார்சலை ஆர்வமாக வாங்கி திறந்த போது அதற்குள்ளே உயிருடன் பாம்பு ஒன்று நெளிவதைக் கண்டு தம்பதி அதிர்ச்சி அடைந்தனர். உடனே பார்சலை ஒரு பிளாஸ்டிக் கூடையில் வைத்து, அதனுள் இருந்து பாம்பு வெளியேறுவதை வீடியோ எடுத்து அமேசானின் சமூக வலைதள கணக்கில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த அமேசான் நிறுவனம், கவனமுடன் பார்சலை அப்புறப்படுத்தும்படி அவர்களிடம் அறிவுறுத்தியுள்ளது.மேலும், அவர்கள் செலுத்திய பணத்தை முழுமையாகத் திருப்பி அளித்துள்ளது.