அரண்மனையில் பீரங்கிகளுக்கு சிறப்பு பூஜை
மைசூரு: தசரா ஜம்புசவாரி ஊர்வலத்தின் போது பயன்படுத்தப்படும், பீரங்கிகளுக்கு நேற்று சிறப்பு பூஜை நடந்தது.மைசூரு தசரா அடுத்த மாதம் 3ம் தேதி துவங்கி 12ம் தேதி வரை, பத்து நாட்கள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் இப்போது இருந்தே ஆரம்பித்து உள்ளன. தசரா விழாவின் கடைசி நாளில் நடக்கும், ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்ற, பல முகாம்களில் இருந்து 14 யானைகள் மைசூருக்கு அழைத்து வரப்பட்டு, அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளன. தினமும் யானைகளுக்கு நடைபயிற்சியும் அளிக்கப்படுகிறது.இந்நிலையில், ஜம்பு சவாரி ஊர்வலத்தின் போது, சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட, தங்க அம்பாரியை சுமந்து வரும் அபிமன்யு யானை மீது மலர் துாவி, ஊர்வலம் துவங்கப்பட்டதும், 21 முறை பீரங்கி குண்டு முழங்கப்படும்.குண்டு சத்தம் கேட்டு யானைகள் மிளராமல் இருப்பதற்காக, ஆண்டுதோறும் பீரங்கி குண்டு வெடித்து, யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம். இதற்காக அரண்மனை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள, ஏழு பீரங்கிகள் இன்று முதல் சுத்தப்படுத்தப்பட உள்ளன. அந்த பீரங்கிகளுக்கு நேற்று சிறப்பு பூஜை நடந்தது.அரண்மனை அர்ச்சகர் சசிசேகர் தீக் ஷித் பூஜை நடத்தினார். மைசூரு போலீஸ் கமிஷனர் சீமா லட்கர் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டு, பீரங்கிகளுக்கு மஞ்சள், குங்குமம் வைத்தனர். நேற்று மாலை நடைபயிற்சி முடிந்ததும், யானைகள் அரண்மனை வளாகத்தில் உற்சாக குளியல் போட்டன.