ரமேஷ்குமார் துரோகம் செய்தார் சீனிவாச கவுடா குற்றச்சாட்டு
கோலார்: ''கோலார் சட்டசபை தொகுதியில் முதல்வர் சித்தராமையாவை களமிறக்குவதாக கூறி இறுதி வினாடியில் ரமேஷ்குமார் துரோகம் செய்துள்ளார்,'' என, காங்., கட்சியின் முன்னாள் அமைச்சர் சீனிவாசகவுடா தெரிவித்தார்.கோலாரில் நேற்று அவர் கூறியதாவது:தனக்கு எந்த பதவியும் வேண்டாம் என கூறி வந்த முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார், இப்போது எம்.எல்.சி.,யாகும் நோக்கில், முதல்வர் சித்தராமையா பின்னால் சுற்றுகிறார். இந்த புண்ணியவானை நம்பி, நான் மோசம் போனேன். ரமேஷ்குமார் சாமியல்ல, மஹாசாமி.ரமேஷ்குமாருக்கு முன்பே, எம்.எல்.ஏ., ஆனவன் நான். இதற்கு முன் அமைச்சராக இருந்தேன். ரமேஷ்குமாருக்கு பதவி கிடைக்கவில்லை. ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்த நான் அமைச்சரானேன். என்னை எம்.எல்.சி.,யாக்கி, அமைச்சராக்குவதில் தவறு என்ன. அமைச்சர் பதவி இவர்கள் அப்பன் வீட்டு சொத்தா. எனக்கு எம்.எல்.சி., பதவி கிடைக்கா விட்டாலும், நான் கட்சியை விட்டு செல்ல மாட்டேன். நான் தரம் தாழ்ந்து அரசியல் செய்ய மாட்டேன்.தன்னை தோற்கடித்ததாக ரமேஷ்குமார் கண்ணீர் விட்டார். அது முதலை கண்ணீர். அதல பாதாளத்துக்கு சென்ற மாவட்ட கூட்டுறவு வங்கியை, பாலஹள்ளி கோவிந்தகவுடா ஒரு மட்டத்துக்கு கொண்டு வந்தார். இந்த புண்ணியவான் (ரமேஷ்குமார்) கூட்டுறவு வங்கியை ஒழித்து கட்டுகிறார்.சட்டசபை தேர்தலில், கோலார் தொகுதியில் சித்தராமையா போட்டியிடுவார் என, கூறி எனக்கு ரமேஷ்குமார் நம்பிக்கை துரோகம் செய்துள்ளார். இப்போது எம்.எல்.சி.,யாக முயற்சிக்கிறார். என்னை எம்.எல்.சி.,யாக்குவதாக கூறியதை மறந்துவிட்டார்.இவ்வாறு அவர் கூறினார்.