உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நெல்லுக்கான ஆதரவு விலை ஒடிசாவில் ரூ.3,100 ஆக உயர்வு

நெல்லுக்கான ஆதரவு விலை ஒடிசாவில் ரூ.3,100 ஆக உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி,தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு, எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தித் தர ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது. இதனால், மாநிலத்துக்கு, ஆண்டுக்கு, 6,000 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ஒடிசா சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில், 24 ஆண்டுகால, நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தள ஆட்சியை வீழ்த்தி, பா.ஜ., முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மோகன் சரண் மஜி, முதல்வராக பதவியேற்றுள்ளார்.

அவசரகால இருப்பு

தேர்தல் பிரசாரத்தின்போது, நெல் விவசாயிகளுக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலையை, உயர்த்தி தருவதாக பா.ஜ., அறிவித்திருந்தது. தற்போது, 1 குவின்டாலுக்கு, 2,183 ரூபாயாக உள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையை, 3,100 ரூபாயாக உயர்த்தி தருவதாக அறிவித்துள்ளது. அதாவது, 42 சதவீத போனஸ் தருவதாக அறிவித்திருந்தது. இதன்படி பார்த்தால், மாநில அரசுக்கு, கூடுதலாக, 6,000 கோடி ரூபாய் செலவாகும் என, கணிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியுள்ளதாவது:

விவசாயிகளுக்கான, எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையை, மத்திய அரசு ஏற்கிறது. தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ரேஷன் வாயிலாக உணவுப் பொருட்கள் வழங்க மற்றும் அவசரகால இருப்புக்காக, மாநிலங்களிடம் இருந்து மத்திய அரசு உணவுப் பொருட்களை கொள்முதல் செய்கிறது.இதற்காக, ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு குறிப்பிட்ட இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. அந்த அளவு உணவுப் பொருட்களையே மத்திய அரசு வாங்கிக் கொள்ளும்.இந்த குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அதிகமாக, மாநில அரசுகள் விலையை நிர்ணயித்தால், அதை அந்த மாநிலங்களே ஏற்க வேண்டும்.பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையிலான சத்தீஸ்கர் அரசு கடந்தாண்டில், இதுபோல போனஸ் தொகையை அறிவித்தது. நடப்பு, 2023 அக்., முதல், 2024 செப்., வரையிலான கொள்முதல் காலத்தில், நெல் கொள்முதலுக்கான உச்சவரம்பில் இருந்து மத்திய அரசு விலக்கு அளித்தது. இதனால், மாநிலத்தின் சுமை குறைந்தது.ஆனால், ஒடிசாவுக்கு இதுபோன்ற விலக்கு அளிக்க மத்திய அரசு தயாராக இல்லை என்று தெரிகிறது. அவ்வாறு விலக்கு அளித்தால், உணவு தானியத்தின் விலை உயரும். இதனால், உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அதிக மானியம் அளிக்க நேரிடும். இது பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கூடுதல் செலவு

ஒடிசாவில், தற்போது, 639 கோடி கிலோ நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதன்படி பார்த்தால், போனஸ் தொகையாக, 6,000 கோடி ரூபாய் மாநில அரசுக்கு கூடுதலாக செலவாகும்.ஒடிசாவுக்கு தற்போது கூடுதலாக கொள்முதல் செய்வதற்கு அனுமதி அளித்தால், அது மற்ற நெல் உற்பத்தி செய்யும் மாநிலங்களிடம் இருந்து செய்யப்படும் கொள்முதலில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். அதனால், விலக்கு அளிக்க மத்திய அரசு தயங்குகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Bye Pass
ஜூன் 16, 2024 06:00

அரிசி உபயோகிப்பது குறைந்து வருகிறது ..விவசாயிகள் தனியாரிடம் நேரிடையாக விற்பனை செய்ய வேண்டும் ..ஏற்றுமதி செய்யவும் அனுமதிக்கலாம்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ