ஆக்ராவை பாரம்பரிய நகரமாக அறிவிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
புதுடில்லி : தாஜ்மஹால் அமைந்துள்ள ஆக்ராவை பாரம்பரிய நகரமாக அறிவிக்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இது தொடர்பான பிரதான வழக்கு, 30 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில் தாஜ்மஹால் அமைந்துள்ளது. தாஜ்மஹாலையும், அதை சுற்றியுள்ள, 10,400 ச.கி.மீ., பகுதியையும் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கக்கோரி, 1984ல் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, பல்வேறு காரணங்களால் தொடர்ந்து விசாரணையில் உள்ளது. இந்நிலையில், இந்த பிரதான வழக்கில் இடைக்கால நிவாரணம் கேட்டு, ஆக்ராவை பாரம்பரிய நகரமாக அறிவிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு, நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'ஆயிரமாண்டு வரலாறு உடைய ஆக்ரா நகரத்தில் அமைந்துள்ள பல வரலாற்று நினைவுச் சின்னங்களை பாதுகாக்க வேண்டியது அவசியம். எனவே, இதை பாரம்பரிய நகரமாக அறிவிக்க வேண்டும்.'அது, சுற்றுலாவுக்கு உத்வேகம் அளிக்கும், வேலை வாய்ப்புகளை உருவாக்கும், இந்த பகுதி பாதுகாக்கப்படும்' என, வாதிட்டார்.இதை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:ஆக்ராவை பாரம்பரிய நகரமாக அறிவிப்பதால் எவ்விதமான சிறப்பு நன்மைகள் கிடைக்கும் என்பதை நிரூபிக்க ஆதாரங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. மேலும் இது போன்ற அறிவிப்பை நீதிமன்றங்கள் பிறப்பிக்க முடியாது. அப்படி அறிவிப்பதால் ஆக்ராவுக்கு என்ன நன்மை கிடைத்துவிடப்போகிறது? நகரம் சுத்தமாகிவிடுமா? இதனால் எந்த பயனும் இல்லை என்றால், இந்த அறிவிப்பே வீண் தானே. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இது தொடர்பான பிரதான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.