விரைவில் வருவார் சூரஜ்: ரேவண்ணா நம்பிக்கை
மைசூரு : “சூரஜ் ரேவண்ணா, கடவுள் பக்தி உள்ளவர். அவர் எளிதில் சிறையில் இருந்து வருவார். தற்போது எந்த விஷயங்களை பற்றியும், நான் பேசமாட்டேன்,” என, அவரது தந்தையும் முன்னாள் அமைச்சருமான ரேவண்ணா தெரிவித்தார்.மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:பிரஜ்வல் ரேவண்ணாவை பற்றி, பேசமாட்டேன். தற்போதைக்கு அவரை சந்திக்க செல்லவில்லை. நான் அவரை சந்திக்கச் சென்றால், மகனுக்கு ஏதோ சொல்லிக் கொடுத்துவிட்டார் ரேவண்ணா என, குற்றம் சாட்டுவர். எனவே நான் அவரை சந்திக்க செல்லவில்லை.என் மனைவி பவானி, பிரஜ்வலை சந்திக்க சென்றிருந்தார். தாயும், மகனும் என்ன பேசினர் என்பது, எனக்கு தெரியாது. சூரஜ், கடவுள் பக்தி உள்ளவர். விரைவில் சிறையில் இருந்து, வெளியே வருவார். தற்போதைக்கு எந்த விஷயம் பற்றியும் பேசமாட்டேன். வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அது முடியட்டும். அதன்பின் அனைத்தையும் விவரிப்பேன். அனைத்துக்கும் காலம் பதில் அளிக்கும்.நான் எதற்கும் பயப்படமாட்டேன்.கடந்த 40 ஆண்டுகளாக, அரசியல் செய்கிறேன். 15 ஆண்டு மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக இருந்தேன். மக்களும், கடவுளும் எங்களை வழிநடத்தினர். நாங்கள் கடவுளை நம்புகிறோம்.இவ்வாறு அவர்கூறினார்.