உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயிற்றிலும், மார்பிலும் எட்டி உதைத்தார் பிபவ் குமார் கெஜ்ரிவால் உதவியாளர் மீது சுவாதி பகிரங்க புகார்

வயிற்றிலும், மார்பிலும் எட்டி உதைத்தார் பிபவ் குமார் கெஜ்ரிவால் உதவியாளர் மீது சுவாதி பகிரங்க புகார்

புதுடில்லி, மே 18-டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார், ஏழு முதல் எட்டு முறை முழு பலத்துடன் தன் வயிற்றிலும், மார்பிலும் எட்டி உதைத்ததுடன், கன்னத்திலும் அறைந்ததாக, ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்.பி., சுவாதி மாலிவால் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., சுவாதி மாலிவால், 39. டில்லி மகளிர் கமிஷன் தலைவராக 2015 - 24 வரை பதவி வகித்தார்.

மோசமான வார்த்தை

சிறையில் இருந்து சமீபத்தில் ஜாமினில் விடுவிக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திப்பதற்காக, டில்லியில் உள்ள அவரது வீட்டுக்கு சுவாதி சமீபத்தில் சென்றார். அப்போது, கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் இவரை கொடூரமாக தாக்கியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். இது தொடர்பாக, பிபவ் குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் சுவாதி குறிப்பிட்டுள்ளதாவது:கடந்த 13ம் தேதி, கெஜ்ரிவாலை சந்திப்பதற்காக டில்லியில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்றேன். அவர் வீட்டில் இருப்பதாகவும் வரவேற்பரையில் காத்திருக்கும்படி அங்கிருந்தவர்கள் கூறினர்.சிறிது நேரம் காத்திருந்தேன். திடீரென வந்த பிபவ் குமார், என்னை நோக்கி மிக மோசமான வார்த்தைகளால் கத்தினார்.'நாங்கள் சொல்வதை நீ எப்படி உதாசீனப்படுத்தலாம். என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய். உனக்கு பாடம் புகட்டுகிறேன் பார்' என, சத்தம் போட்டார்.சற்றும் எதிர்பாராத நேரத்தில் ஏழெட்டு முறை கன்னத்தில் பலமாக அறைந்தார். அதிர்ச்சியில் நான் சத்தம் போட்டு அழத் துவங்கினேன். என்னை பாதுகாத்துக் கொள்ள அவரை காலால் எட்டி உதைத்தேன். உடனே அவர் என் மீது பாய்ந்து சட்டையை பிடித்து இழுத்தார். பட்டன்கள் அறுந்து தெறித்தன. அங்கிருந்த டேபிளில் தலை இடித்து, நான் தரையில் சரிந்தேன். உதவி கேட்டு கதறினேன். ஒருவரும் வரவில்லை. அப்படியும் ஆத்திரம் தீராத பிபவ் குமார், என் மார்பு மற்றும் வயிற்றில் முழு பலத்துடன் எட்டி உதைத்தார்.நான் வலியில் துடித்தேன். மாதவிடாய் இருப்பதால் தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள் என கெஞ்சினேன். உடனடியாக போலீஸ் உதவி எண்ணான 112ஐ அழைத்து நடந்ததை கூறினேன். அப்போது என் அருகில் வந்த பிபவ், 'உன்னால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. உன் எலும்புகளை உடைத்து, குழிதோண்டி புதைத்துவிடுவோம்' என, மிரட்டினார்.

விசாரணை

பின், பிபவ் குமார் அங்கிருந்து சென்றதும், முதல்வர் அலுவலக பாதுகாவலர் ஒருவர் அங்கு வந்து என்னை புறப்படும்படி கூறினார். அதற்குள் போலீசார் வந்தனர். அவர்களுடன் நான் சிவில் லைன்ஸ் போலீஸ் ஸ்டேஷன் சென்றேன். ஊடகத்தினர் தொலைபேசியில் என்னை தொடர்ந்து அழைத்தனர். வலி பொறுக்க முடியவில்லை. மேலும் இந்த விவகாரத்தை அரசியலாக்க விரும்பாததால் புகார் அளிக்காமல் திரும்பினேன். இவ்வாறு சுவாதி அதில் குறிப்பிட்டுள்ளார்.மேலும், டில்லி தீஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் நேற்று ஆஜரான சுவாதி, நடந்த சம்பவங்களை நீதிபதியிடம் நேரில் விவரித்தார். இதைத் தொடர்ந்து சுவாதியை, கெஜ்ரிவால் வீட்டுக்கு நேற்று அழைத்துச் சென்ற டில்லி போலீசார், நடந்த சம்பவங்கள் குறித்து அவரிடம் விரிவாக விசாரணை நடத்தினர். இதனால், கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார், எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, கெஜ்ரிவால் வீட்டில் சுவாதி அத்துமீறி நடந்து கொண்டதாக, டில்லி போலீசில் பிபவ் குமார் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது. பா.ஜ., தலைவர்களின் அறிவுறுத்தலின்படியே, கெஜ்ரிவால் வீட்டுக்கு சுவாதி சென்றுள்ளார். அங்கு அவர் மீது எந்தவிதமான தாக்குதலும் நடக்கவில்லை என்பது கண்காணிப்பு கேமரா பதிவுகளில் தெரியவந்துள்ளது. கெஜ்ரிவாலை சிக்க வைப்பதற்காகவே, சுவாதியை, பா.ஜ.,வினர் அங்கு அனுப்பி உள்ளனர். ஆனால், சம்பவம் நடந்தபோது கெஜ்ரிவால் அங்கு இல்லை. அவர்களது சதித் திட்டம் தோல்வி அடைந்ததால், பிபவ் குமார் மீது சுவாதி புகார் கூறியுள்ளார். ஆதிஷிடில்லி அமைச்சர், ஆம் ஆத்மி

பா.ஜ.,வின் சதி!

52 நொடி வீடியோ!

சுவாதி தாக்கப்பட்டதாக கூறப்படும் அன்று, கெஜ்ரிவால் வீட்டு கண்காணிப்பு கேமராவில் பதிவான 52 நொடி வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று பரவியது. அதில், கெஜ்ரிவாலின் அலுவலக பாதுகாவலர்களுடன், சுவாதி வாக்குவாதம் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.இது குறித்து சுவாதி மாலிவால் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், 'எப்போதும் போல தன்னை காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் அரசியல் அடியாள் ஈடுபட்டுள்ளார். அவரது வீட்டு வரவேற்பறையின் வீடியோ வெளியானால் உண்மை வெளிச்சத்துக்கு வரும்' என, குறிப்பிட்டுள்ளார்.

நழுவும் பிபவ்!

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு நேற்று நேரில் ஆஜராகும்படி பிபவ் குமாருக்கு தேசிய மகளிர் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. ''அவர் இன்றும் ஆஜராகவில்லை எனில், அவரை தேடிச் சென்று விசாரணை நடத்தப்படும்,'' என, தேசிய மகளிர் கமிஷன் தலைவர் ரேகா சர்மா தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ''பெண்களுக்கு இலவசங்களை வாரி வழங்கும் கெஜ்ரிவால், தன் வீட்டில் ஒரு பெண் தாக்கப்பட்டதை கண்டும் காணாமலும் உள்ளார். அவர் குற்றவாளி பிபவ் குமாருக்கு ஆதரவாக உள்ளார் என்பது இதிலிருந்தே தெளிவாகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி