உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கல்லுாரி விடுதியில் ரகசிய கேமரா: மாணவியர் போராட்டத்தால் பதற்றம்

கல்லுாரி விடுதியில் ரகசிய கேமரா: மாணவியர் போராட்டத்தால் பதற்றம்

அமராவதி: ஆந்திராவில் பெண்கள் கல்லுாரி விடுதி கழிப்பறையில் வைக்கப்பட்டிருந்த ரகசிய கேமரா வாயிலாக வீடியோ எடுக்கப்பட்டதை அறிந்த மாணவியர் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் எஸ்.ஆர்.குட்லவல்லேரு பொறியியல் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. தனியார் கல்லுாரியான இங்கு ஏராளமான மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். மாணவர் கைதுஇரு பாலருக்கும் தனித்தனியாக விடுதி வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இங்குள்ள பெண்கள் விடுதி கழிப்பறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததை அங்கிருந்த மாணவியர் நேற்று முன்தினம் இரவு பார்த்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்த அவர்கள் விடுதியில் இருந்து வெளியேறி கல்லுாரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், மாணவியரின் பெற்றோரும் அங்கு குவிந்தனர்.உரிய பாதுகாப்பு தர வலியுறுத்தி மாணவியர் நடத்திய போராட்டம் நள்ளிரவு துவங்கி ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதையடுத்து, அங்கு வந்த போலீசார், ரகசிய கேமராவைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், அதே கல்லுாரியில், பி.டெக்., நான்காம் ஆண்டு படிக்கும் விஜய் என்ற மாணவர், தன் தோழியின் உதவியுடன் பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் வாயிலாக பதிவான, 300க்கும் மேற்பட்ட வீடியோக்களை பிற மாணவர்களுக்கு விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், போலீசார் இதை உறுதிப்படுத்தவில்லை.விஜயின் மொபைல் போன், லேப் - டாப் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவரிடமும், மேலும் சில மாணவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். கேமரா வைத்த மாணவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, மாணவியர் விடுதிக்கு திரும்பிச் சென்றனர். அதிர்ச்சிஇதற்கிடையே, விடுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட கேமராவில் எந்த காட்சியும் பதிவாகவில்லை என போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெண்கள் கல்லுாரி கழிப்பறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட சம்பவம், பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

விசாரணைக்கு உத்தரவு

மாணவியர் விடுதியில் ரகசிய கேமரா வைக்கப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்த மாநில மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தன் சமூக வலைதள பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:குட்லவல்லேரு பொறியியல் கல்லுாரியில் மாணவியர் நடத்திய போராட்டம் குறித்த விபரங்களை அதிகாரிகளிடம் கேட்டேன். ரகசிய கேமராக்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். இதில், தவறு நடந்திருப்பது தெரியவந்தால், குற்றவாளிகள் மற்றும் அதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ