| ADDED : மே 28, 2024 09:57 PM
நொய்டா:புதுடில்லி அருகே சமீபத்தில் முதியவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற 'ஆடி' காரை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.டில்லி அருகே நொய்டா 24வது செக்டாரில் வசித்தவர் ஜனக்தேவ் ஷா,55. கடந்த 26ம் தேதி அதிகாலை 6:30 மணிக்கு பால் வாங்கச் சென்றார். அப்போது, அதிவேகமாக வந்த வெள்ளை நிற 'ஆடி' கார், ஷா மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.தூக்கி வீசப்பட்ட ஜனக்தேவ் ஷா, -பலத்த காயம் அடைந்து அதே இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். பால் வாங்கச் சென்ற தந்தையை நீண்ட நேரமாகக் காணவில்லை என்பதால் அவரது மகன், தேடி வந்தார். சாலை ஓரத்தில் தந்தை இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து, 23வது செக்டார் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.விரைந்து வந்த போலீசார், ஷா உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.விபத்து ஏற்படுத்திய வெள்ளை நிற ஆடி கார், ஹரியானாவில் பதிவு செய்யப்பட்டது என்பதை கண்டுபிடித்தனர். டில்லி கித்வாய் நகர் என்.பி.சி.சி., வளாகம் அருகே நேற்று நிறுத்தப்பட்டு இருந்த வெள்ளை நிற ஆடி கார் பறிமுதல் செய்யப்பட்டது.அதேநேரத்தில், இந்த விபத்து தொடர்பாக யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. அதன் உரிமையாளரிடம் விசாரணை நடக்கிறது.கடந்த 16ம் தேதி, நொய்டாவில் இ--ரிக்ஷா மீது சிறுவன் ஓட்டிச் சென்ற பி.எம்.டபிள்யூ., கார் மோதி இருவர் உயிரிழந்தனர்.புதுடில்லி அருகே உ.பி.,யின் கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் கடந்த 2023 ஆண்டு 1,176 சாலை விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் 470 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 858 பேர் காயம் அடைந்துள்ளனர். அதேபோல, 2022ல் ஏற்பட்ட விபத்துக்களில் 437 பேர் இறந்துள்ளனர்.