மூணாறு, மூணாறு அருகே வட்டவடை ஊராட்சியில் சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுமானத்தை, தமிழக அரசியல் கட்சியினரின் எதிர்ப்பையும், பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவையும் மீறி தொடர, அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.கேரளா, இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே வட்டவடை ஊராட்சியின் பெருகுடா பகுதியில் சிலந்தியாற்றின் குறுக்கே, 'ஜலஜீவன் மிஷன்' குடிநீர் திட்டத்தில் தடுப்பணை கட்டப்படுகிறது.55,000 ஏக்கர் சாகுபடிஇந்த ஆறு அமராவதி அணையின் நீர் ஆதாரமான பாம்பாற்றின் துணை ஆறு என்பதால், அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து பாதிக்கப்படும்; திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 55,000 ஏக்கர் சாகுபடியும், 110 குடிநீர் திட்டங்களும் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.தமிழகத்தில் தி.மு.க., தவிர பிற முக்கிய கட்சிகள் அனைத்தும், இந்த பிரச்னைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்த தென் மண்டல பசுமை தீர்ப்பாயம், 'தடுப்பணை கட்ட மத்திய சுற்றுச்சூழல், தேசிய வன உயிரின வாரியம், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் ஆகியவற்றிடம் கேரள அரசு அனுமதி பெற்றுள்ளதா? பெற்றிருக்காவிடில், தடுப்பணை கட்டுவதை கேரள அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்' என, இரு தினங்களுக்கு முன் உத்தரவிட்டது.இந்நிலையில், இது தொடர்பான ஆலோசனை கூட்டம் வட்டவடை ஊராட்சி தலைவர் கணபதியம்மாள், துணைத் தலைவர் மனோகரன் தலைமையில் நேற்று நடந்தது.வட்டவடை பகுதி இந்திய கம்யூ., செயலர் செந்தில்குமார், மார்க்சிஸ்ட் கம்யூ., செயலர் குமாரசாமி, காங்., மண்டல தலைவர் சேதுராமன், பா.ஜ., சார்பில் பாண்டியன், ராமர், முன்னாள் ஊராட்சி தலைவர் ராமராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.தடுக்க முயற்சி'தமிழகத்தில், அரசியல் சுய லாபத்திற்காக சிலர் வட்டவடை மக்களின் குடிநீர் திட்டத்தை தடுக்க முயற்சிக்கின்றனர். அதை முறியடிக்கும் வகையில் போராட்டங்கள், 'பந்த்' நடத்தப்படும். அதேபோல, சட்ட நடவடிக்கைக்கு நீதிமன்றத்தை அணுகப்படும். தடுப்பணை பிரச்னையில் கேரள அரசு எவ்வித கருத்தும் தெரிவிக்காததால் கட்டுமானம் தொடரப்படும்' என முடிவு செய்யப்பட்டது.