சிறுமியை கடத்த முயற்சித்தவர் கைது
ராம்நகர்: தீய பழக்கங்களுக்கு பணம் புரட்ட, 7 வயது சிறுமியை கடத்த முற்பட்டவர் கைது.ராம்நகரின் சாமுண்டிபுரா லே - அவுட்டில் வசிப்பவர் தர்ஷன், 22. இவர் தீய பழக்கங்களுக்கு அடிமையானவர். கஞ்சா, பீடி, சிகரெட் பழக்கம் உள்ளவர். எந்த வேலைக்கும் செல்லாத இவர், கஞ்சா, பீடி, சிகரெட் வாங்க, தனக்கு தெரிந்தவர்களிடம் 10 ரூபாய் 20 ரூபாய் தானம் பெற்று கொள்வார்.இவரது தீய பழக்கங்களை அறிந்த அக்கம், பக்கத்தினர் பணம் கொடுப்பதை நிறுத்தினர்.பணம் கிடைக்காததால், அதே பகுதியில் வசிக்கும் சந்தோஷ் என்பவரின் 7 வயது மகளை கடத்தி, 2 லட்சம் ரூபாய் கேட்க, தர்ஷன் திட்டமிட்டார். இதற்காக சரியான நேரத்தை எதிர்பார்த்திருந்தார்.இப்பகுதியில் நேற்று முன்தினம் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. இரவு 9:00 மணியளவில் சிறுமி, விநாயகர் பந்தல் அருகில் தனியாக நின்றிருந்தார்.அப்போது அங்கு வந்த தர்ஷன், சிறுமியின் வாயை பொத்தி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு, அழைத்து சென்றார். வாயை, கைகளை டேப் போட்டு ஒட்டினார்.மகளை காணாத சந்தோஷ் அங்கும், இங்கும் தேடினார். சிறுமி பந்தல் அருகில் நின்றிருந்ததாக சிலர் கூறினர். அப்பகுதி இளைஞர்களும், சந்தோஷுடன் சேர்ந்து சிறுமியை தேட துவங்கினர்.இளைஞர்கள் தேடியபடியே, சிறுமி இருந்த இடத்துக்கு வந்தனர். இவர்களை பார்த்த தர்ஷன், நைசாக நழுவ முற்பட்டார்.இதனால் இளைஞர்கள், சந்தேகம் அடைந்து அவரை பிடித்து விசாரித்த போது, சிறுமியை கடத்தியதை ஒப்புக்கொண்டார்; இடத்தையும் காட்டினார். இளைஞர்கள் அங்கு சென்ற போது, வாயில் டேப் ஒட்டப்பட்டு, மூச்சு திணறும் நிலையில் இருந்தார். உடனடியாக சிறுமி வாயில், கை, கால்களில் ஒட்டப்பட்ட டேப்பை அகற்றி, அவரை காப்பாற்றி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த ஐஜூர் போலீசார், தர்ஷனை கைது செய்தனர்.