| ADDED : மே 30, 2024 10:02 PM
பெங்களூரு - சட்டவிரோதமாக வசித்து வரும், வங்கதேச பிரஜைகளின் வீடுகளில் சி.சி.பி., போலீசார் திடீர் சோதனை நடத்தினர். சிலரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.வங்கதேச பிரஜைகள், சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி, பெங்களூரில் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். போலியான ஆவணங்களை தாக்கல் செய்து, ஆதார் கார்டு, ரேஷன்கார்டு பெற்றுள்ளதாக தகவல் வந்தது. எனவே சி.சி.பி., போலீசார் அவ்வப்போது ஆங்காங்கே சோதனை நடத்துகின்றனர்.ஒரு மாதத்துக்கு முன், பெங்களூரின் பல இடங்களில் சோதனை நடத்தி, சட்டவிரோதமாக வசித்து வந்த ஷமீம் அகமது, முகமது அப்துல்லா, ஹரூன் முகமது, நுார் ஜஹான் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் வைத்திருந்த பாஸ்போர்ட், ஆதார் கார்டு, ஆயுஷ்மான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை பறிமுதல் செய்தனர்.எலக்ட்ரானிக் சிட்டி, ராமமூர்த்தி நகர் உட்பட வங்கதேசத்தவர் வசிக்கும் ஆறு இடங்களில் சி.சி.பி., போலீசார் சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை 3:00 மணி வரை சோதனை தொடர்ந்தது. அவர்களிடம் உள்ள ஆவணங்கள், எத்தனை ஆண்டுகளாக பெங்களூரில் வசிக்கின்றனர் என்பது குறித்து, ஆய்வு செய்தனர்.சிலரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரிக்கின்றனர். எந்த வழியாக நாட்டுக்குள் வந்தனர் என்ற தகவல்களை சேகரிக்கின்றனர்.