ரூ.40 கோடி கோகைன் கடத்தல்; வெளிநாட்டினர் மூவர் கைது
புதுடில்லி; தென் அமெரிக்க நாடான பிரேசிலில் உள்ள சாவ்பாவ்லோ நகரில் இருந்து, டில்லிக்கு ஜன., 28ல் பெண் பயணி ஒருவர் வந்தார். அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர், முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார். சந்தேகம் அடைந்த சுங்கத்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவரை பரிசோதனை செய்தனர். அப்போது அவரது வயிற்றில் 866 கிராம் எடையுள்ள 98 கேப்சூல்கள் இருப்பது தெரியவந்தது. அதை வெளியில் எடுத்து சோதனை நடத்தியதில், அது கோகைன் போதை பொருள் என்பதும், அதன் மதிப்பு 13 கோடி ரூபாய் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண் கைது செய்யப்பட்டார்.இதேபோல் பிரேசிலில் இருந்து ஜன., 24ல் டில்லிக்கு விமானத்தில் வந்த மற்றொரு பெண் பயணியும் போதை பொருள் கடத்தி வந்துள்ளதாக, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.அந்த பெண்ணிடம் நடத்திய சோதனையில் 802 கிராம் கோகைன் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 12 கோடி ரூபாய். இதையடுத்து அந்த பெண்ணும் கைது செய்யப்பட்டார்.கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவில் இருந்து ஜன., 24ல் டில்லி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த கென்யாவை சேர்ந்த நபர் கடத்தி வந்த, 996 கிராம் கோகைன் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 15 கோடி ரூபாய். மூன்று கடத்தல் சம்பவங்கள் வாயிலாக மொத்தம் 40 கோடி ரூபாய் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், மூன்று வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.