உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல்: பிரதமர்

ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல்: பிரதமர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஊடுருவலை, ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அரசு ஊக்குவிக்கிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடக்கிறது.இம்மாநிலத்திற்கு இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், ஜாம்ஷெட்பூரில் உள்ள கோபால் மைதானத்தில் பா.ஜ., நடத்திய பொதுக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசியதாவது:ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், அதிகாரப் பசியால் ஓட்டு வங்கி அரசியல் செய்கின்றன. ஜார்க்கண்டின் மிகப்பெரிய எதிரிகளே இவர்கள் தான். பழங்குடியினரின் ஓட்டுகளால் ஆட்சிக்கு வந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர், பழங்குடியினரின் நிலங்கள் மற்றும் வனங்களை அபகரித்தவர்களுடன் கூட்டணி சேர்ந்து இந்த மாநிலத்தை சுரண்டுகின்றனர்.அவர்களின் அதிகாரப் பசியால், பழங்குடியின முதல்வர் சம்பாய் சோரன் அவமானப்படுத்தப்பட்டார். முதல்வர் ஹேமந்த் சோரனின் அண்ணி சீதா சோரன் அவமதிப்புக்கு ஆளானார். மதத்தின் பெயரால் தங்கள் ஓட்டு வங்கியை அதிகரிக்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி களமிறங்குகிறது. காங்கிரசிடம் இருந்து ஊழலை கற்றுக் கொண்டு, சுரங்கங்கள், கனிமங்கள், ராணுவ நிலங்களை கொள்ளையடித்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரமிது.வங்கதேசம் மற்றும் மியான்மரின் ரோஹிங்கியா முஸ்லிம்களின் ஊடுருவலால், சந்தால் பர்கானாஸ் மற்றும் கோல்ஹான் பகுதி மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளின் மக்கள் தொகையில் அவர்கள் வேகமாக வளர்கின்றனர். பழங்குடியினரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.பஞ்சாயத்துகளை, ஊடுருவல்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்; நிலங்களை அபகரிக்கின்றனர்; பெண்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுகின்றனர். இதனால், பழங்குடியினரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது.தங்கள் ஓட்டு வங்கி அரசியலுக்காக, இந்த ஊடுருவல்களை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசு ஊக்குவிக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.'பிரதமர் ஆவாஸ் யோஜனா கிராமின்' எனப்படும் அனைவருக்கும் வீடு திட்டத்தில், ஜார்க்கண்டில் 1,13,400 பேருக்கு வீடு கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட 46,000 வீடுகளுக்கான சாவியை பயனாளர்களிடம் பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக வழங்கினார். மேலும், 32,000 பயனாளிகளுக்கான வீடு கட்டும் ஒப்புதல் கடிதத்தை பிரதமர் அளித்தார். அவர்களுக்கான முதல் தவணையான, 32 கோடி ரூபாய் நேற்று வழங்கப்பட்டது.

6 வந்தே பாரத் ரயில்கள் துவக்கம்!

ஜார்க்கண்டில் இருந்து ஒடிசா, பீஹார், மேற்கு வங்கம் மற்றும் உத்தர பிரதேசத்தை இணைக்கும் ஆறு வந்தே பாரத் ரயில்களை, பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார். ராஞ்சியில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பச்சைக்கொடி காட்டி ரயில் சேவையை துவக்கினார்.இந்த ரயில்கள் டாடா நகர் - பாட்னா, பிராமபுர் - டாடா நகர், ரூர்கேலா - ஹவுரா, தியோகார் - வாரணாசி, பாகல்பூர் - ஹவுரா, கயா - ஹவுரா வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
செப் 16, 2024 05:34

குடும்ப ஆட்சி என்பதால் மக்களைப்பற்றி கவலைப்படாமல் முழு நேரமும் ஊழல் செய்வதிலேயே காலத்தை கடத்தினார்கள். நடவடிக்கை எடுத்தால் உடனே பழிவாங்கல் என்று ஒப்பாரி வைத்து விடுகிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை