எம்.எல்.சி., வீட்டில் கல் வீசிய இருவர் கைது
மங்களூரு : காங்கிரஸ் எம்.எல்.சி., ஐவன் டிசோசா வீட்டின் மீது கல் வீசியதாக பஜ்ரங் தள் அமைப்பின் இருவர் கைது செய்யப்பட்டனர்.'மூடா'வில் இருந்து மனைவி பார்வதிக்கு, முதல்வர் சட்டவிரோதமாக மனை வாங்கிக் கொடுத்ததாக புகார் எழுந்தது. முதல்வர் சித்தராமையா மீது வழக்குப் பதிய கவர்னர் தாவர்சந்த் கெலாட் உத்தரவிட்டார்.கவர்னரை கண்டித்து மங்களூரில் நடந்த போராட்டத்தில், காங்கிரஸ் எம்.எல்.சி., ஐவன் டிசோசா, கவர்னருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார்.இந்நிலையில், கடந்த 20ம் தேதி இரவு, மங்களூரு பாண்டேஸ்வரில் உள்ள, ஐவன் டிசோசா வீட்டின் மீது கல் வீசப்பட்டது. ஜன்னல் கண்ணாடி நொறுங்கியது. கல்வீச்சு தொடர்பாக, பாண்டேஸ்வரா போலீசார் விசாரித்தனர்.கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், நேற்று முன்தினம் இருவர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் கல்லடுக்காவை சேர்ந்த தினேஷ், 20, பரத், 24, என்பதும், பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் தெரிந்தது.