| ADDED : ஜூன் 03, 2024 03:48 AM
குவஹாத்தி : அசாமில் 10 மாவட்டங்களில் வெள்ள நீர் வடியாததால், ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலமான அசாமில், 'ரேமல்' புயல் காரணமாக, கடந்த வாரத்தில் கனமழை பெய்தது. இதனால், மாநிலத்தில் பாயும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால், பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்தது.தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில பேரிடர் மீட்புப்படை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 40,000 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 15 பேர் மழை, வெள்ளத்துக்கு உயிரிழந்துஉள்ளனர்.மாநிலத்தில் உள்ள கோபிலி, பராக், குஷியாரா ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பாய்கிறது. நாகோன், ஹோஜாய், கச்சார் உட்பட 10 மாவட்டங்களில் இன்னும் வெள்ள நீர் வடியாமல் உள்ளது. இந்த மாவட்டங்களில் ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தவித்து வருகின்றனர். இதில், நாகோன் மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. இங்கு மட்டும் மூன்று லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், ரயில் மற்றும் சாலை வழித்தடங்களும் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இதனால், நிவாரண பொருட்களை சேர்ப்பதில் சிரமம் நிலவுகிறது. அசாமில் இன்று வரை 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக, தென்கிழக்கு எல்லை ரயில்வே அறிவித்துஉள்ளது.