உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வரை நீக்க கோரியவருக்கு ஐகோர்ட் கண்டனம் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை

முதல்வரை நீக்க கோரியவருக்கு ஐகோர்ட் கண்டனம் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை

புதுடில்லி:அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்கக் கோரி தொடர்ந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த டில்லி உயர் நீதிமன்றம், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., சந்தீப் குமாருக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கூறி உள்ளது.புதுடில்லி சுல்தான்பூர்மஜ்ரா சட்டசபை தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,வாக 2015ல் தேர்தேடுக்கப்பட்டவர் சந்தீப் குமார்,43. இவர், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

பதவி பறிபோனது

பாலியல் புகாரில் சிக்கிய சந்தீப் குமார் 2016ம் ஆண்டு அமைச்சர் பதவியில் இருந்தும், செப்டம்பரில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.பாலியல் புகார் தொடர்பாக டில்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து சந்தீபை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, அவரது எம்.எல்.ஏ., பதவியும் பறிபோனது. தற்போது ஜாமினில் இருக்கிறார்.சந்தீப் குமார் டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.இதனால், அரசியல் சட்டத்தின் கீழ் முதல்வரின்பணிகளைச் செய்ய அவரால் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அவர் இன்னும் பதவி விலகாமல் இருப்பது அரசியலமைப்பு நெறிமுறையை மீறும் செயல். அரசியலமைப்பு சட்டப்படி சிறையில் இருந்தவாறே ஒருவர் முதல்வராக செயல்பட முடியாது.

அமைச்சர்கள் குழு

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 239 ஏஏ பிரிவு - 4ன் கீழ், சட்டசபைக்கு அதிகாரம் உள்ள விஷயங்களில் துணைநிலை கவர்னரின் செயல்களுக்கு உதவவும், ஆலோசனை வழங்கவும் முதல்வர் தலைமையிலான அமைச்சர்கள் குழு செயல்பட வேண்டும். ஆனால், முதல்வரே சுதந்திரமாக இல்லாமல் துணைநிலை கவர்னருக்கு ஆலோசனை வழங்க சாத்தியம் இல்லை. எந்த அதிகாரத்தின் கீழ் டில்லி முதல்வராக கெஜ்ரிவால் பதவி வகிக்கிறார் என்பதை விளக்க கெஜ்ரிவாலை விசாரணைக்கு வர உத்தரவு பிறப்பிக்க வேண்டும். விசாரணைக்குப்பின், டில்லி முதல்வர் பதவியில் இருந்து கெஜ்ரிவாலை நீக்கி உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தனிப்பட்ட விருப்பம்

இந்த மனுவை நேற்று முன் தினம் விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், ''இதேபோன்ற மனுக்கள் ஏற்கனவே தற்காலிக தலைமை நீதிபதியால் விசாரிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த மனுவையும் தற்காலிக தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு 10ம் தேதி விசாரிக்க பட்டியலிடலாம்,'' என, உத்தரவிட்டார். அதேநேரத்தில், இந்த மனு சுய விளம்பரத்துக்காகதாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் அதிகளவில் அபராதம் விதிக்கப்பட தகுதியானவர் என்றும் தன் உத்தரவில் கூறியிருந்தார்.முதல்வர் பதவியில் இருந்து கெஜ்ரிவாலை நீக்கக் கோரி தொடரப்பட்ட இரண்டு பொதுநல வழக்குகளை கடந்த 4ம் தேதி விசாரித்த உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மன்மீத் பி.எஸ். அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வு, ''முதல்வர் பதவியில் தொடருவது அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட விருப்பம். ''கைது செய்யப்பட்டுஉள்ளதால் முதல்வர் பதவியை பறிக்க சட்டத்தில் இடமில்லை,'' எனக்கூறி தள்ளுபடி செய்தது.இந்நிலையில், சந்தீப் குமாரின் மனு, தலைமை நீதிபதி மன்மோகன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி பிறப்பித்த உத்தரவு:இதே விஷயத்தை நீதிமன்றம் ஏற்கனவே ஒருமுறை விசாரித்து, தள்ளுபடி செய்துள்ளது. மீண்டும் மீண்டும் மனு தாக்கல் செய்வது நீதிமன்ற பணியை கேலி செய்வது போல் இருக்கிறது. இது, ஜேம்ஸ் பாண்ட் சினிமா அல்ல. இதே கோரிக்கையுடன் மீண்டும் மனுத்தாக்கல் செய்யக்கூடாது.

உத்தரவு

நீதிமன்றத்தில் அரசியல் செய்யும் சந்தீப் குமாருக்கு இந்த நீதிமன்றம் 50,000 ரூபாய் அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது. அரசின் விவகாரங்களை கவர்னர் கவனிப்பார். அரசியல் சூழ்ச்சியில் நீதிமன்றத்தை சிக்க வைக்க முயற்சிக்கிறீர்கள். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.கடந்த மார்ச் 28 மற்றும் ஏப்ரல் 4 ஆகிய தேதிகளில் இதேபோன்று பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு அவை தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும், இதுதொடர்பாக டில்லி துணைநிலை கவர்னரை அணுகவும் நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி