| ADDED : ஆக 03, 2024 10:17 PM
வயநாடு :கேரள மாநிலம், வயநாடு நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்று இரவு (03.08.2024) நிலவரப்படி 361 ஆக ஆக உயர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. வயநாடு மாவட்டத்தில் மலைப்பகுதியில் அமைந்துள்ள சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மழை கொட்டியது. இதனால், நிலச்சரிவுகள் ஏற்பட்டு, கட்டடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பல கட்டடங்கள் மண்ணில் புதைத்தன. இந்த சம்பவத்தில் நேற்று முன்தினம் வரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 291 ஆக இருந்தது.தொடர்ந்து அங்கு ராணுவம், விமானப்படை, கடற்படையுடன், தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டட இடிபாடுகள், மணல் குவியல்களுக்குள் சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று வெளியான அறிவிப்பில் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 361 பேர் பலியானதாகவும், தொடர்ந்து அங்கு மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.